காரைக்கால் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வரும் 31-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள், பரிகாரங்கள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அத்துடன் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மாஹே பிராந்தியத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் இன்று (மார்ச் 19) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "புதுச்சேரி மாநிலத்தின் மாஹே பகுதியில் மூதாட்டி ஒருவர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக வந்த தகவலையடுத்து முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுடன் இணைந்து இன்று மாஹே பகுதிக்குச் சென்றனர்.
அங்கு கரோனா பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்து, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புப் பணிகள் மற்றும் விழிப்புணர்வுப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆலயத்திற்கு சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது அனைவரும் அறிந்ததே. எனினும்,கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு, மக்கள் கூட்டமாகக் கூடாமல் இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
எனவே, அருள்மிகு ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆலயத்தில் வரும் 31-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள், பரிகாரங்கள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டு, தினப்படி பூஜைகள் மட்டுமே நடைபெறும்.
பக்தர்களும், பொதுமக்களும் இந்தச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, ஆலயத்திற்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.