மனிதத்துக்கு எதிரான எதிரி கரோனா என்றும் அதை எதிர்த்துப் போராட வேண்டும் எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. அண்டார்டிகா மாகாணம் தவிர்த்து அனைத்து கண்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது
இதுதொடர்பாக உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் கீப்ரேய்சஸ் கூறும்போது, ''கரோனாவால் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித குலத்துக்கு எதிராக, முன்னெப்போதும் இல்லாத பொதுவான எதிரி- மனிதத்துக்கு எதிரான எதிரி உருவாகி உள்ளது.
இதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். உங்கள் சமூகத்தினர் பாதிக்கவில்லை என்று எண்ணாதீர்கள். எப்போதும் விழிப்புணர்வுடன், தயாராக இருங்கள்.
உலக சுகாதார மையம் அனைத்து மாகாணத் தலைவர்கள், சுகாதார அமைச்சர்கள், மருத்துவமனைகளுடன் பேசிவருகிறது. சந்தேகப்படும் ஒவ்வொரு நபரையும் பரிசோதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
தனிமைப்படுத்தல், பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல், கண்டுபிடித்தல் ஆகியவற்றின் மூலம் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.
சமூகத்தில் இடைவெளியைப் பராமரியுங்கள். இவற்றைச் செய்யாத பட்சத்தில் கரோனா சங்கிலி தொடர்ந்துகொண்டே இருக்கும். கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட இரண்டு மாதத்துக்குள் தடுப்பூசி முயற்சி தொடங்கப்பட்டது உண்மையிலேயே வியக்கத்தக்க சாதனை'' என்று டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.