கரோனா வைரஸ்

கோவிட் 19 வைரஸால்  ப்ரீகேஜி முதல்  5ம் வகுப்பு வரை புதுச்சேரியில் நாளை முதல் வரும் 31ம் தேதி வரை விடுமுறை

செ.ஞானபிரகாஷ்

கோவிட் 19 வைரஸால் ப்ரீகேஜி முதல் 5ம் வகுப்பு வரை புதுச்சேரியில் நாளை முதல் வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்கள் உள்ளன. இச்சூழலில் கேரளத்தை ஒட்டியுள்ள மாஹே பிராந்தியத்தில் கல்வி நிறுவனங்கள் ஏற்கெனவே விடுமுறை விடப்பட்டுள்ளன.


இச்சூழலில் தமிழக கல்வி முறையை புதுச்சேரி, காரைக்காலில் பின்பற்றி வருகின்றனர். அங்கு எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை மார்ச் 31 வரை விடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளிகளில் விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் அருந்த இங்கு தனியாக வாட்டர் பெல் விடப்படுகிறது. அந்த நேரத்தில் கை கழுவவும் வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


இச்சூழலில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு அனைத்து பள்ளிகளுக்கும் விடுத்துள்ள உத்தரவில், புதுச்சேரியில் கோவிட் 19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை பிரிகேஜி முதல் 5ம் வகுப்பு வரை வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி நிர்வாகங்கள் எக்காரணத்தை கொண்டும் வகுப்புகளை நடத்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT