சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் 2 ம் பாகம் இன்று வெளியாகிறது.
முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு. ஆனால், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. நள்ளிரவு மற்றும் அதிகாலையில் அனுமதியின்றி காட்சிகள் திரையிடப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ரெட்ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்துக்கே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்காதது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் நடித்த 'துணிவு' பட ரிலீஸின்போது அதிகாலை சிறப்புக் காட்சியை பார்க்க வந்தபோது நிகழ்த்திய கொண்டாட்டத்தில் ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். இதனால், சிறப்புக் காட்சிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளதால் அரசு இந்த சுற்றறிக் கையைஅனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி படக்குழுவிடம் கேட்டபோது, "பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கும் அதிகாலை காட்சிகள் திரையிடப்படவில்லை. முதல் காட்சி காலை 9 மணிக்குத்தான் திரையிடப்பட்டது. அதேபோல இந்தப் படத்துக்கும் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்படும். சிறப்புக் காட்சிக்கு அரசிடமும் நாங்கள் அனுமதி கேட்கவில்லை. அதனால் அரசு தடை விதித்ததாக கூறுவது சரியல்ல’’ என்றனர்.
திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, ‘‘அதிகாலை சிறப்புக் காட்சிகளால் எங்களுக்கும் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இனி, அதிகாலை காட்சிகள் இருக்காது. 9 மணிக்குத்தான் முதல் காட்சி திரையிடப்படும். அதேபோல இரவு 12 மணிக்கு மேல் காட்சிகள் திரையிட மாட்டோம்’’ என்றார்.