சில்லென்ற தீப்பொறி ஒன்றை நெஞ்சங்களில் பரவச் செய்யும் இசை வித்தகர் வித்யாசாகர்!

By குமார் துரைக்கண்ணு

இசையமைப்பாளர் வித்யாசாகர் தனது 59-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளையொட்டி அவர் மீட்டிய இசைக்குறித்து விரிவாக பார்ப்போம்.

கிராமோபோன்கள், ரெக்கார்டுகளின் ஆதிக்கத்தை வென்ற டேப் ரெக்கார்டர்கள், டிடிகே கேசட்டுகளின் ஆட்சி முடிவுக்கு வந்து, சிடி பிளேயர்களும், சிடிக்களும் பட்டித்தொட்டியெங்கும் பரவிக்கொண்டிருந்த காலக்கட்டம். களத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்து இருந்து வருகின்றனர். இந்நேரத்தில் எந்தவித சலனமுமின்றி ஒரு இசையமைப்பாளர் தனது மேம்பட்ட இசை திறனால் தமிழ் திரையுலகின் 'மெலடி கிங்' ஆக உருவெடுக்கிறார். அவர்தான் இசை வித்தகர் வித்யாசாகர்.

ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வித்யாசாகர் பாரம்பரிய இசைக் குடும்பத்தில் பிறந்தவர். முறையாக இசை கற்ற அவர், தனது தந்தையுடன் சேர்ந்து ரிக்கார்டிங் ஸ்டுடியோக்களுக்கு செல்வது வழக்கம். விப்ரோபோன், பியானோ, கிடார், கீபோர்ட், ஆர்மோனியம் இசைக்கத் தெரிந்த அவர் 14 வயது முதலே எம்எஸ்வி, இளையராஜா உட்பட இந்தியாவின் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இசைக்கலைஞராக மட்டுமின்றி மியூசிக் கண்டக்டராகவும் இருந்துள்ளார்.

1989ம் ஆண்டே 'பூமனம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார் . ஆனாலும் 1994ல் வெளிவந்த 'ஜெய்ஹிந்த்' திரைப்படம்தான் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது. அதன்பின்னர் வெளிவந்த நடிகர் அர்ஜுனின் கர்ணா, செங்கோட்டை, ஆயுத பூஜை, சுபாஷ், தாயின் மணிக்கொடி உள்பட பல பங்களுக்கு இசையமைத்தார். பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் தமிழில் தொடர் வெற்றி கிடைக்கவில்லை. இந்த சூழலில், மலையாளம், தெலுங்கில் அவரது இசையில் வெளியான திரைப்படங்கள் ஹிட்டடிக்க, அங்கு பிஸியாகிவிடுகிறார்.

இதைத்தொடர்ந்து அவரது கடுமையான உழைப்பும், நிகரற்ற இசையும் அவர் தொட்டதையெல்லாம் துலங்கச் செய்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத தடாகமாகிறது அவரது இசை. அந்தந்த மொழிகளில் பாடல் கேட்பவர்களின் மனங்களில் பொங்கி பிரவாகம் எடுக்கிறது. விஜய், அஜித், விக்ரம், மாதவன், ஜீவா, ஷாம், தொடங்கி ரஜினி, கமல் என நீண்ட வித்யாசாகரின் 2000க்குப் பிறகான இசை படையெடுப்பு, இந்தமுறை அவரை யாராலும் வெல்ல முடியாத சிம்ம சொப்பனமாக்குகிறது. தமிழ் திரை இசை ரசிகர்கள் அவரது பாடல்களை சிடி தேய்ந்து போகும் அளவுக்கு முணுமுணுக்கத் தொடங்கிவிடுகின்றனர்.

எம்ஸ்வி - பாலச்சந்தர், இளையராஜா - பாரதிராஜா, ஏஆர் ரஹ்மான் - மணிரத்னம் வரிசையில் வித்யாசாகர் - தரணி காம்போ தமிழ் சினிமாவில் பல வரலாற்று வெற்றிகளைப் பதிவு செய்கிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள காம்போவுக்கு குறைவில்லாத வகையில், இந்த காம்போவும் தமிழ் திரையிசை ரசிகர்களுக்கு திகட்டாத தேனமுதான பாடல்களைக் கொடுத்திருக்கிறது. குறிப்பாக தில், தூள், கில்லி இந்த 3 திரைப்படங்களும் இக்கூட்டணியின் எவர்கிரீன் பக்கங்களாகும். இப்படங்களில் வந்த எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்டடித்தவை. திரையே தீப்பற்றிக் கொள்ளும் இந்த மூன்று திரைப்படங்களுக்கான ரீரிக்கார்டிங்கிலும் தெறிக்க விட்டிருப்பார் வித்யாசாகர். இத்திரைப்படங்களின் இசையும் திரைக்கதையும் படம் பார்ப்பவர்களை கனகவேலாகவும், ஆறுமுகமாகவும், வேலுவாகவும் மாற்றும் வல்லமை கொண்டவை.

இந்த வரிசையில் வித்யாசாகரை தமிழ் சினிமா ரசிகர்கள் வாரியணைத்து வாஞ்சை கொள்ள செய்த மற்றொரு திரைப்படம் ரன். "சக்தி நான் ஒன்ன விரும்பல, ஒன்மேல ஆசப்படல, நீ அழகா இருக்கேனு நினைக்கல" என வசனம் பேசிக்கொண்டு சாக்லேட் பாயாக இருந்த மேடியை, சப்வேயின் ஷட்டரை சாத்திவிட்டு பிரியாவுக்காக அவளது அண்ணனின் அடியாட்களை அடித்து துவைக்கும் அனல்தெறிக்கும் ஆக்சன் ஹுரோவாக உருமாற்றியது இத்திரைப்படம்தான். இந்தப்படமும் பாடல்களும் திருவிழா காலத்து தேர்போல ரசிகர்கள் மனதில் எப்போதும் வலம் வருபவை.

இவரது இசையை என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கச் செய்யும் மற்றொரு திரைப்படம் அன்பே சிவம். முதலாளித்துவ அரசியலின் கோரமுகத்தையும், நல்லசிவத்தின் கொள்கைப் பிடிப்புள்ள காதலையும் இசையால் விவரித்திருக்கும் திரைப்படம். குறிப்பாக பகுத்தறிவுடன்கூடிய கடவுள் சிந்தனையை கவிப்பேரரசு வைரமுத்துவின் "யார் யார் சிவம்" என்ற பாடல் மூலம் மிக எளிமையான ட்யூனில், ஆத்திகம் பேசும் மனிதருக்கு சிவமே அன்பென்றும், நாத்திகம் பேசும் மனிதருக்கு அன்பே சிவமென்றும் மிக எளிதாக விளங்க வைத்திருப்பார் வித்யாசாகர்.

1999ல் வெளிவந்த படையப்பா வெற்றியைத் தொடர்ந்து 3 வருட இடைவெளிக்குப்பின் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாபா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் இந்த விஷயம் பேசுபொருளாக மாறியது. நடிகர் ரஜினிகாந்தின் இறுதி வெற்றி படையப்பாதான் என்று கணிக்கப்பட்டது. இந்த சூழலில் 2005ல் வெளிவந்த திரைப்படம்தான் சந்திரமுகி. இரண்டு பாடலை எப்படியாவது ஹிட்டாக்கித் தரும்படி கேட்டுக்கொண்ட ரஜினிக்கும் படத்தின் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கித் தந்தவர் வித்யாசாகர். அதிலும் "ரா ரா சரசுக்கு ரா ரா" பாடல். சுந்தர தெலுங்கு கீர்த்தனை மூலம் தமிழ் திரையிசை ரசிகர்களின் மனதை சுவீகரித்துக் கொண்டார் வித்யாசாகர்.

வித்யாசாகர் இசையில் கவிஞர் யுகபாரதியின் பாடல்கள் மெச்சத்தகுந்தவை. இதற்கான காரணத்தையும், வித்யாசாகருடன் பணியாற்றத் தொடங்கிய அனுபவங்களையும் ஒரு விழா மேடையில் யுகபாரதி நகைச்சுவைத் ததும்ப விவரித்திருப்பார். அவரது இசையில் பல பாடல்களை எழுதியிருந்தாலும் யுகபாரதி பார்த்திபன் கனவு படத்தில் எழுதியிருக்கும் "கனா கண்டேனடி தோழி" பாடல் முக்கியமானது. தீவிர வாசிப்பாளரான வித்யாசாகர் தன்னுடைய பாடல்கள் மிக எளிமையாக இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருப்பவர். தன்னுடைய பாடல் கேட்பவர்கள் அதை எளிதாக புரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தின் வெளிப்பாடே அது.

பரம்பரை, ப்ரியம், சிநேகிதியே, நிலாவே வா, உயிரோடு உயிராக, அன்பு, ராமன் தேடிய சீதை, மொழி, இயற்கை, குருவி உட்பட இருநூறுக்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள வித்யாசாகர், ஸ்வராபிஷேகம் என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார். தனது தனித்துவமான இசையில் மாணிக்க விநாயகம், உதித் நாராயணன், சுக்வீந்தர் சிங், சாதனா சர்கம், சுபா முட்கல் உள்பட 30க்கும் மேற்பட்ட புதிய பாடகர்களை அறிமுகப்படுத்திய பெருமை வித்யாசாகரையே சேரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

14 mins ago

இந்தியா

17 mins ago

வேலை வாய்ப்பு

29 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்