ட்ரிகர் Review: அழுத்தமான ஒன்லைன் இருந்தும் தடுமாற்றத்துடன் தப்பிய குறி!

By கலிலுல்லா

குழந்தைக் கடத்தல் கும்பலுக்கும் ஹீரோவுக்குமான ஆடு-புலி ஆட்டத்தில் என்ன நடந்தது என்பதுதான் 'ட்ரிகர்'. போலீஸ் அதிகாரியான பிரபாகரன் (அதர்வா) குற்றவாளி கும்பலை பிடிக்கச் செல்லும் அசைமெண்ட்டில் விதியை மீறியதால் பணிநீக்கம் செய்யபடுகிறார். இருப்பினும் அவரது நேர்மை, திறமையின் காரணமாக தவறு செய்யும் காவலர்களை கண்காணிக்கும் அன்டர்கவர் போலீஸாக நியமிக்கப்படுகிறார்.

இப்படியான பிரபாகர் வாழ்க்கையில் குழந்தைக் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்படும் மைக்கேல் (ராகுல் தேவ் ஷெட்டி) எதிர்பாராமல் குறுக்கிட, மோதலும் வெடிக்கிறது. தனது தந்தைக்கும் மைக்கேலுக்குமான பின் கதை ஒன்றும் பிரபாகருக்கு தெரியவர, ஹீரோ - வில்லன் கைகளிலிருக்கும் துப்பாக்கியின் 'ட்ரிகர்' யாரை நோக்கி சுட்டது? என்பதுடன் பல்வேறு புதிர்களுக்கு விடை சொல்லும் படம் தான் இந்த 'ட்ரிகர்'.

'டார்லிங்', 'குர்கா' படங்களின் மூலம் கவனம் பெற்ற சாம் ஆன்டன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். த்ரில்லர் - ஆக்சன் கதைக்களத்தைத் தாண்டி, படம் தந்தை - மகன் உறவு குறித்தும், குழந்தையில்லாத தம்பதியினர் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசுகிறது. படத்தில் இரண்டு விதமான தந்தை - மகன் உறவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

போலியான பொய்யை நம்பி தந்தையை விலக்கி வைக்கும் மகன் ஒருபுறம், அதே சூழலை எதிர்கொண்ட மற்றொரு தந்தையை அவர் மகன் அணுகும் விதமும் வெவ்வேறு பார்வையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோரில்லாத குழந்தைகள், மகனால் விலக்கப்பட்ட தந்தை, தனது தந்தைக்கு ஆதரவாக நிற்கும் மகன்... இந்த மூன்று புள்ளிகளை இணைத்ததன் வழியே பல்வேறு விஷயங்களை சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன்.

படம் பேச முனையும் இந்த வலிமையான கருத்தின் திரைவடிவம் நிறைய இடங்களில் தடுமாறியிருக்கிறது. முழுவதும் ஹீரோவை நம்பி முதலீடாக்கப்பட்ட திரைக்கதையில், எதற்கெடுத்தாலும் நாயகன் முந்திக்கொண்டு வந்து நிற்கிறார். ஒருபுறம் குழந்தையை காப்பாற்றுவது, மறுபுறம் இளம்பெண்ணை மீட்பது, நண்பனுக்காக பாய்வது, இரண்டு குண்டு பதம் பார்த்த பின்பும் தடயமேயில்லாமல் சுற்றுவது என ஹீரோயிசம் திரையில் தெறிக்கிறது.

மொத்த காவல் துறையின் வேலையை ஒரே ஆளாக செய்யும் நாயகனாக அதர்வா. அதீத ஹீரோயிச கதாபாத்திரம் என்றாலும், தனது வழக்கமான நடிப்பை பதியவைக்க தவறவில்லை. நாயகி தான்யா ரவிசந்திரன் 'குழந்தைகளுக்கு ஒருநாள் சாப்பாடு போட்றத விட, அவங்களோட அன்றாட தேவைகளுக்கு காசு கொடுங்க' என கூறும் தனது மிகையில்லா நடிப்பில் கவனம் பெறுகிறார். அல்சைமர் நோயின் தாக்கத்தில் பாதிக்கபட்டு, தோற்றுப்போன காவல் துறை அதிகாரியான அருண் பாண்டியன்
தனது இயலாமையை வெளிப்படுத்தும் தருணங்களிலும், உடைந்து அழும் இறுதிக்காட்சியிலும் உணர்வுகளின் வீரியத்தை அச்சுபிசகாமல் கடத்துகிறார்.

ராகுல் தேவ் ஷெட்டியின் வில்லத்தனமும், 'சிங்க இனத்தைச் சேர்ந்ததால மட்டுமே பூனை புலியோ, சிங்கமோ ஆகிடாது' என்ற வசனமும் கதையோட்டத்தை தாங்கி நிற்கின்றன. ஆனால், அவர் ஏன் அத்தனை நாட்கள் சிறையிலிருக்கிறார் உள்ளிட்ட அவரது கதாபாத்திர தன்மை தெளிவுபடவில்லை. அத்துடன் சிறைக்கான செட் ஏற்கும்படியாக இல்லை. தவிர வினோதினி, அழகம் பெருமாள், முனீஸ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் தேர்ந்த நடிப்பு பலம்.

நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் காட்சிகள்தான் ஒட்டுமொத்த படத்தின் பலவீனம். உதாரணமாக, காவல் துறை ஆணையரை ஏதோ எஸ்ஐ போல டீல் செய்வது, ஹேக்கர் ஒருத்தரைக் கொண்டு எல்லா வண்டிகளையும் ட்ராக் செய்வது மட்டுமல்லாமல், அதிலிருக்கும் கேமராவில் கூட புகுந்து வில்லன்களின் வில்லதனத்தை படம்பிடித்து காட்டுவது, ஹீரோ செய்வதை வில்லன் ஜோசியக்காரர் போல கணிப்பது, வில்லன் செல்லும் பாதையை ஹீரோ கணிப்பது என ஏகப்பட்ட லாஜிக் மீறல்களால் காட்சிகள் பிசுபிசுக்கின்றன.

இதை தவிர்த்து விட்டு பார்த்தால், படத்தில் இடைவேளைக்கு முன்பாக வரும் ஆக்‌ஷன் காட்சியில் கிருஷ்ணன் வசந்தின் கேமராவும், அதற்கேற்ற ட்ரான்சிஷனும் வெகுவாக ரசிக்க வைக்கின்றன. ஜிப்ரானின் இசையில் பாடல்கள் ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசையால் பார்ப்பவர்களை 'ட்ரிகர்' செய்துள்ளார்.

அழுத்தமான ஒன்லைனை தடுமாறும் திரைக்கதை வழியே சொல்லியதால் பார்வையாளர்களை படம் பெரிய அளவில் 'ட்ரிகர்' செய்யவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

15 mins ago

தமிழகம்

46 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்