பபூன் Review: கதையும் களமும் ரசிகர்களுக்கு திருப்தி அளித்ததா?

By கலிலுல்லா

நாடக கலைஞனின் வாழ்க்கையில் நாடகமாடும் எதிர்பாராத சம்பவங்களும் திருப்பங்களுமே 'பபூன்' படத்தின் ஒன்லைன். காரைக்குடியில் நாடக கம்பெனி ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கும் குமரன் (வைபவ்) மற்றும் முத்தையா(ஆத்தங்குடி இளையராஜா) இருவரும் தாங்கள் சார்ந்திருக்கும் நாடக தொழில் நலிவடைந்து வருவதால் வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிக்கலாம் என திட்டமிடுகின்றனர். ஆனால், வெளிநாடு செல்ல போதிய பணமில்லாததால் தற்காலிகமாக போதைப்பொருள் கடத்தல் மன்னன் தனபால் என்பவரிடம் லாரி ஓட்டுநராக குமரனும், முத்தையாவும் பணிக்கு சேர்கின்றனர்.

ராமநாதபுரத்திலிருந்து உப்பை ஏற்றிகொண்டு வரும் அவர்கள் லாரியில் உப்புக்கு பதிலாக போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு காவல் துறை அவர்களை கைது செய்கிறது. சிறையில் அடைக்க அழைத்துச் செல்லும் வழியில் குமரனும், முத்தையாவும் தப்பித்துவிட, இறுதியில் அவர்களை காவல் துறை கண்டுபிடித்ததா? யார் இந்த தனபால்? போதைப்பொருள் கும்பலிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள்? - இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் படம்தான் 'பபூன்'.

காரைக்குடி வாழ் குமரனாக வைபவ். தனக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைக்குள் சிக்கி, அதிலிருந்து வெளியேற போராடும் இளைஞனின் உருவாக திரையில் தோன்றுகிறார். வழக்கமான தனது நடிப்பை பதிய வைக்க மறந்தாலும், சில இடங்களில் முகத்தில் பயத்தையும், பதற்றத்தையும் உணர்வாக்கி வெளிப்படுத்துவதில் பிசிறடிக்கிறது. பாடகரான ஆத்தங்குடி இளையராஜாவுக்கு இது முதல் படம். நல்வருகை என்றாலும், கதைக்கு அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் தேவைப்படவில்லை.

நாயகி அனேகா இலங்கைச் சேர்ந்த அகதிப்பெண்ணாக காட்சிப்படுத்தபடுகிறார். டப்பிங்கிலும், இலங்கை மொழியை சரளமாக்குவதிலும் செயற்கைத்தனம் துருத்துகிறது. ஜோஜு ஜார்ஜ் 'கொலமாஸ்' ஆக வந்திறங்கி அதகளம் செய்கிறார். அவர் நடந்துவரும் காட்சிகளுக்கும் பின்னணி இசைக்குமான பிணைப்பு திரைக்கு அழுகூட்டுகிறது. அவருக்கான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். தமிழரசன், ஆடுகளம் நரேன், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்டோரின் நடிப்பு கதைக்கு வலு சேர்க்கிறது.

கண்டுகொள்ளப்படாத நாடக கலைஞர்களின் வாழ்க்கையையும், அதையொட்டிய சிக்கல்களை கையிலெடுத்தது, இலங்கை அகதிகள் குறித்த பதிவு, புலம்பெயர் தமிழர்களின் நிலைகள் குறித்து பேச முயன்றிருக்கிறார் இயக்குநர் அசோக் வீரப்பன். அதை வரவேற்றாலும், அகதிகள் பிரச்சினை, அரசியல் போதைப்பொருள் கடத்தல் என படத்தில் பல்வேறு கூறுகளை நுழைத்து, தான் சொல்ல வந்த கருத்தில் இயக்குநர் தடுமாறியிருப்பதை உணரமுடிகிறது.

பல்வேறு கருத்தாக்கங்களை தொட முயலும் இப்படைப்பு ஆழமற்று, தெளிவற்று, மேலோட்டமாக நகர்வது பார்வையாளர்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கண்டதும் காதல் வகையறா பாணியை ஏற்றுகொண்டாலும், இரண்டு, மூன்று காட்சிகளில் மட்டுமே நாயகி சந்திக்கும் நாயகனுக்கு, உடனே ஒரு காதல் சோகப்பாடல் வைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்! கதையோட்டத்திற்கு தேவைப்படா காதல் திணிப்பு.

படத்தில் துண்டுத் துண்டாக 'கட்' ஆகும் காட்சிகள் ட்ரெய்லரை பார்ப்பது போன்ற உணர்வை கொடுத்து முழுமையை தவறவிடுகின்றன. முதல் பாதியில் பெரிய பிரச்சினையில் சிக்கிகொள்ளும் வைபவ், ஆத்தங்குடி இளையராஜாவிடம் பெயரளவுக்கு கூட பதற்றமில்லாமலிருப்பதால் திரையிலிருந்து பார்வையாளர்களை விலக்கிவிடுகிறது.

அதேபோல, அகதிகள் பிரச்சினை எடுத்துக்கொண்ட இயக்குநர் அதனை இன்னும் விரிவுபடுத்தியிருக்கலாம்’ மேலோட்டமாக சொன்னதோடு, அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக காட்டியிருப்பது நெருடல். சந்தோஷ் நாராயண் பின்னணி இசையும், பாடல்களும் கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கின்றன. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவில் காரைக்குடி, ராமநாதபுரம், தூத்துக்குடியோடு இயைந்த கடலழகு கண்களுக்கு விருந்து.

சொல்ல நினைக்கும் கருத்தை அழுத்தமாகவும், ஆழமாகவும், சுவாரஸ்யமான திரைக்கதையுடன் தேவையற்ற காட்சிளை தவிர்த்துவிட்டு சொல்லியிருந்தால் பபூன் அழகாயிருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

7 mins ago

இந்தியா

47 mins ago

கருத்துப் பேழை

40 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்