திரை விமர்சனம்: மாமனிதன்

By செய்திப்பிரிவு

கம்பம் நகரில் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தும் கிராமத்து வெள்ளந்தி மனிதரான ராதாகிருஷ்ணன் (விஜய் சேதுபதி), தன் மகன், மகளை தனியார் பள்ளியில் சேர்க்க விரும்புகிறார். அதற்குஅதிக பணம் தேவைப்படும் என்பதால், மாதவன் (ஷாஜி சென்) என்ற ரியல் எஸ்டேட் அதிபருக்கு சொந்தமான வீட்டுமனைகளை விற்றுத் தரும் தரகு வேலையில் இறங்குகிறார். பணத்துடன் ஊரைவிட்டு ஓடுகிறார் மாதவன். நேர்மைக்கு பெயர்பெற்ற ராதாகிருஷ்ணனை ஒரே இரவில் மோசடிக்காரனாக பார்க்கின்றனர் ஊரார். இதனால், அவரும் தலைமறைவாகிறார். ஊர் மக்களிடம் சிக்காமல் இருக்க ராதாகிருஷ்ணன் எடுக்கும் முடிவும், அவரது எஞ்சிய வாழ்க்கையும்தான் கதை.

விஜய் சேதுபதியுடன் இயக்குநர் சீனுராமசாமி இணைந்திருக்கும் 4-வது படம். மோசடிக்காரர்களை கண்மூடித்தனமாக நம்பி வீழ்ந்த பிறகு, நாயகன் சந்திக்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்பதை சொன்ன விதத்தில் தனக்கே உரிய முத்திரையை பதிக்கிறார் இயக்குநர்.

ராதாகிருஷ்ணனின் மனைவி, பிள்ளைகளின் உலகைச் சொல்லும் முதல் அரை மணி நேரத்தில் தேனி, கம்பம் பகுதி மக்களின் வாழ்க்கைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது படம். ராதாகிருஷ்ணனை தேடும் காவல் ஆய்வாளர், மொழிஅறியாத ஊரில் அவருக்கு கைகொடுப்பவர்கள், தலைமறைவாகும் மாதவனின் அம்மா, தேநீர் கடை சேச்சி, என முதன்மைகதாபாத்திரங்களுக்கு இணையாக துணை கதாபாத்திரங்களை தீட்டி, வாழ்வின் மீதும், சக மனிதர்கள் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்த முயன்று, அதில் வெற்றியும் பெறுகிறார் இயக்குநர்.

கடின உழைப்பால் முன்னேறிய, நியாய உணர்வு மிக்க மனிதர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் விஜய் சேதுபதி. குறிப்பாக, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மீறி கண்ணீர் வெடிக்கும் பல தருணங்களை அவர் தனது நடிப்பின் மூலம் உருவாக்கியிருக்கிறார். அவரது மனைவியாக வரும் காயத்ரி தன்னம்பிக்கையும், அற உணர்வும் மிக்கபெண்ணாக சிறப்பான நடிப்பை தருகிறார். விஜய் சேதுபதியின் இஸ்லாமியநண்பனாக வரும் குரு சோம சுந்தரம், மோசடிக்காரராக வரும் ஷாஜிசென், அவரது அம்மாவாக வரும் மறைந்த கலைஞர் கேபிஏசி லலிதா, தேநீர் கடைநடத்தும் ஜுவெல் மேரி என அனைவரும் ஆழமான தாக்கம் ஏற்படுத்துகின்றனர்.

பின்னணி இசையில் இளையராஜா - யுவன் ஷங்கர் கவனம் ஈர்க்கின்றனர். ‘தட்டிப்புட்டா’, ‘என்ன நடக்குது சாமி’ ஆகிய 2 பாடல்கள் மனதை ஈர்க்கின்றன. தேனி மாவட்ட கிராமிய வாழ்வையும், கேரளாவின் ஆலப்புழையின் நீர்மையையும் கண்முன் நிறுத்துகிறது செல்வகுமாரின் ஒளிப்பதிவு.

அடிதடியும், வன்முறையும் மட்டுமே நிறைந்திருக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில், ஆர்ப்பாட்டமின்றி தெளிந்த நீரோடைபோல செல்லும் ‘மாமனிதன்’ போன்ற மனிதம் பேசும் படங்களுக்கு, நம் மனதில் எப்போதும் ஓர் இடம் தரலாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்