ஒரு திரை நட்சத்திரத்துக்கான அர்த்தத்தை மறுவரையறை செய்துள்ளார் சூர்யா: வெற்றிமாறன் ஆதரவு

By செய்திப்பிரிவு

நடிகர் சூர்யா, சமூக நீதியை நிலைநாட்டும் தனது முயற்சிகளின் மூலம் ஒரு திரை நட்சத்திரத்திற்கான அர்த்தத்தை மறுவரையறை செய்துள்ளார் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஆனால், இந்தப் படத்திற்கு பாமக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. முன்னதாக நடிகர் சூர்யாவுக்கு, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், 9 கேள்விகளை முன்வைத்து ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்.

அதில், " 'ஜெய் பீம்' என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து நடித்துள்ள நீங்களும், உங்கள் குழுவினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதை விட, வன்னியர்களை இழிவுபடுத்துவதில்தான் அதிக கவனம் செலுத்தியிருக்கிறீர்கள். இதுதான் 'ஜெய் பீம்' என்பதற்கு நீங்கள் அறிந்து கொண்ட பொருளா? எனவும் படைப்பாளிகளில் இரு வகை உண்டு. ஒரு தரப்பினர் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இரண்டாவது தரப்பினர் திரைப்படத்தில் ஏதேனும் சர்ச்சையை எழுப்பி, அதைப் பேசுபொருளாக்கி, அந்த விளம்பரத்தில் திரைப்படத்தை ஓட வைக்க முயல்பவர்கள். இவற்றில் எந்த வகையில் உங்களைச் சேர்ப்பது?" என அன்புமணி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு நடிகர் சூர்யா ஏற்கெனவே பதிலளித்துவிட்ட நிலையில், திரைத்துறை பிரபலங்கள் பலரும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக வெற்றிமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தப் படத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையை உலகறியச் செய்ய வேண்டும் என்ற இயக்குநர் த.செ.ஞானவேலின் பொறுப்புணர்வும், சமூக நீதியை நிலைநிறுத்துவதில் திரையிலும், நிஜத்திலும் நடிகர் சூர்யா மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளும் உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன.

#JaiBheem இத்தகைய படங்கள் சமூக நீதி ஏற்படக் கூடாது என விரும்புவோருக்கு பதற்றத்தை ஏற்படுத்துவது இயல்பே. #WeStandWithSuriya சமூகத்தில் நிலவும் பேதங்களையும், அநீதிகளையும் கேள்வி கேட்கும் திரைப்படங்களும் கூட சமூக நீதி ஆயுதங்களே. ஆகையால் நாங்கள் 'ஜெய் பீம்' படக்குழுவுடன் எப்போதும் நிற்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தச் சிறிய அறிக்கையைப் பகிர்ந்து வெற்றிமாறன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ”சரியான விஷயத்தைச் செய்வதற்காக யாரும் தாழ்வாக உணரும் நிலைக்குத் தள்ளப்படக் கூடாது. நடிகர் சூர்யா, ஒரு திரை நட்சத்திரத்திற்கான அர்த்தத்தை மறுவரையறை செய்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

வலைஞர் பக்கம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

38 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்