'அண்ணாத்த' VS ’எனிமி’; 250 திரையரங்குகள் கிடைக்காவிட்டால் போராடுவேன்: 'எனிமி' தயாரிப்பாளர் ஆவேசம்

By செய்திப்பிரிவு

'எனிமி' படத்துக்குப் போதிய திரையரங்குகள் கிடைக்காமல் இருப்பதால் தயாரிப்பாளர் வினோத் குமார் ஆவேசமாகப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினி நடித்துள்ள 'அண்ணாத்த' மற்றும் விஷால் - ஆர்யா நடித்துள்ள 'எனிமி' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. சிலம்பரசன் நடித்துள்ள 'மாநாடு' திரைப்படம் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியுள்ளது.

இதில் 'அண்ணாத்த' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இதனால் பல்வேறு திரையரங்குகள் 'அண்ணாத்த' படத்துக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. 'எனிமி' படத்தைத் தனித்தனியாக விநியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டார் தயாரிப்பாளர் வினோத் குமார். ஆனால், போதிய திரையரங்குகள் கிடைக்காமல் திணறி வருகிறார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 'எனிமி' தயாரிப்பாளர் வினோத் குமார் ஆடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு பெரும் வைரலாகி வருகிறது.

இந்த ஆடியோ பதிவில் வினோத் குமார் கூறியிருப்பதாவது:

" 'எனிமி' என்கிற படத்தைத் தயாரித்துள்ளேன். வரும் நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகிறோம். பல ஏரியாக்களில் இப்போது நடக்கும் பிரச்சினை என்னவென்றால் ஒரு பெரிய படம் வர இருப்பதால் அனைவருமே அந்தப் படத்தைத்தான் திரையிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகத் தகவல் வருகிறது.

அது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. அது உண்மையாக இருந்தால், என்னுடைய சங்கத்தில் நான் கேட்க வேண்டிய ஒரு விஷயம், ஹாட்ஸ்டார் தளத்திலிருந்து எனக்குச் சலுகைகள் கொடுக்கப்பட்டும் திரையரங்கத்தில் வெளியிட வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல படத்தை எடுத்துவிட்டுத் திரையரங்குகளுக்கு வந்திருக்கிறேன். அதற்கான முழு ஆதரவையும் உங்களிடம் தாழ்மையுடன் கேட்கிறேன்.

சினிமாவுக்கு இது ஆரோக்கியமான விஷயமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. தீபாவளி போன்ற ஒரு பெரிய விழாவுக்கு 2 படங்கள் நான்கு நாட்கள் ஓடினாலே 2 படங்களுக்குமே போதுமான அளவு ஷேர் வந்துவிடும். என்னதான் ஒரு படம் ஒரு பெரிய சூப்பர் ஸ்டாரின் படமாக இருந்தாலும், 900 திரைகளிலும் அந்த ஒரு படத்தை ஓட்டி அவர்களால் நல்ல பெயர் வாங்கமுடியாது. அது அனைவருக்குமே தெரிந்த உண்மை.

பெரும்பாலான திரையரங்குகளில் 40 சதவீதத்துக்கு மேல் புக்கிங் வராது. அப்படி அந்த ஒரு படத்தை மட்டுமே அனைத்துத் திரையரங்குகளிலும் ஓட்டி அனைவரும் வந்து பார்த்தால் 150 கோடி ரூபாய் ஷேர் வரவேண்டும். அப்படி நடந்ததாக வரலாறே கிடையாது. இதற்கு என்னுடைய சங்கம் முழு ஆதரவு வழங்கவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். எனக்கு அதிகம் வேண்டாம். 250 திரையரங்குகள் போதும்.

என் படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த 250 தியேட்டர்களில் நான் எதிர்பார்க்கும் அந்த சிறிய ஷேரை என்னால் அடையமுடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. அந்த 250 திரையரங்குகளும் எல்லா ஏரியாக்களிலும் கலந்து வரும்படி எனக்கு உங்கள் ஆதரவு வேண்டும். இது நடக்கவில்லை என்றால் அதற்கு எதிராக நான் கட்டாயமாகப் போராடுவேன். அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நான் பேசுவேன்.

நாம் நேர்மையாக ஒரு தொழில் செய்கிறோம். இந்தக் கஷ்டம் வேறு யாருக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக நான் பேசுகிறேன். இந்தத் தருணத்தில் எல்லோரும் ஒன்றாக இருந்தால்தான் இதை நாம் எதிர்கொள்ளமுடியும். என்ன இருந்தாலும் நான் தீபாவளிக்குப் படத்தை ரிலீஸ் செய்வேன். எனக்கு 250 தியேட்டர் கிடைக்குமாறு உதவும்படி என் சங்கத்திடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு 'எனிமி' தயாரிப்பாளர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

28 mins ago

ஜோதிடம்

38 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்