ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவில் உள்ள மிகப்பெரிய ஆபத்து: கார்த்தி பேட்டி

By செய்திப்பிரிவு

ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா தொடர்பாக தமிழக முதல்வரைச் சந்தித்து திரையுலகினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜூன் 18-ம் தேதி ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை வெளியிட்டது மத்திய அரசு. அந்த மசோதா வெளியானதிலிருந்து இந்தியா முழுக்க உள்ள பல்வேறு திரைக் கலைஞர்கள் தங்களுடைய கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். தமிழ்த் திரையுலகில் இந்த மசோதாவுக்கு கமல், சூர்யா, விஷால், கார்த்தி, கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, இன்று (ஜூலை 5) தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமசாமி, நடிகர் கார்த்தி, ரோகிணி, 2டி நிறுவனத்தின் ராஜசேகர் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா தொடர்பாக தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து ஆதரவு கோரினார்கள்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் கார்த்தி பேசியதாவது:

"ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதிலிருக்கும் சட்டத்திருத்தங்கள் அனைத்துமே சினிமா தொழிலாளர்களையும், சினிமா எடுப்பவர்களின் வாழ்வாதாரத்தையுமே பாதிக்கும் அளவுக்கு இருக்கின்றன. அதில் பாராட்டப்பட வேண்டிய அம்சம் என்றால், பைரசிக்கு எதிராக வலுவான சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்.

அதில் அச்சப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தணிக்கைச் சான்றிதழ்தான். ஒவ்வொரு படத்தையும் ஒரு குழுவினர் பார்த்துவிட்டுத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவார்கள். அதில் பிரச்சினை இருந்தால், அவர்களுக்கு மேல் ஒரு குழு இருக்கும். அவர்களிடம் சொல்லலாம். அங்கும் பிரச்சினை என்றால் ட்ரிபியூனலுக்குச் செல்லலாம். அதை 2017-ம் ஆண்டு ரத்து செய்துவிட்டார்கள்.

ஆனால், இப்போது மத்திய அரசே அடுத்த தணிக்கை முறையீடு தளமாக இருக்கப் போகிறது. தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை எந்தவொரு தருணத்திலும் அரசாங்கம் ரத்து செய்ய முடியும் என்ற சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்து. இனிமேல் எடுக்கப் போகிற படங்கள் மட்டுமன்றி, இதுவரை எடுக்கப்பட்ட படங்களுக்கும் ஆபத்தாக இருக்கப் போகின்றன. இதை எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பதை இன்னும் அறிவிக்கவே இல்லை. அதற்கு ஒரு குழு இருக்கப் போகிறதா, அதில் சினிமா தெரிந்தவர்கள் இருப்பார்கள் என்ற எதுவுமே தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம் என்பது கருத்துச் சுதந்திரம் மட்டுமில்லாமல் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் விஷயமாக இருக்கிறது.

தமிழ்த் திரையுலகினர் சார்பில் தமிழக அரசின் ஒத்துழைப்பு, ஆதரவு தேவை என்பதால் தமிழக முதல்வரைச் சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளைச் சொல்லியிருக்கிறோம். அவர்களும் அதைப் பார்த்து ஆதரவு தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இது எங்களுடைய உரிமைக்கான ஒரு குரல். இதை அப்படியே நிறுத்தாமல் பெரிதாக எடுத்துச் செல்லவுள்ளோம். எங்களுடைய உரிமைக்காகப் போராடுவோம்".

இவ்வாறு கார்த்தி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

சினிமா

15 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்