ஒளிப்பதிவாளர், இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவு: திரையுலகினர் அதிர்ச்சி, அஞ்சலி

By செய்திப்பிரிவு

இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்தின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இந்த திடீர் மறைவு அதிர்ச்சியைத் தருவதாகப் பெரும்பாலானோர் கூறியுள்ளனர். ட்விட்டரில் கே.வி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரபலங்கள் சிலர் பகிர்ந்துள்ள ட்வீட்டுகளின் தொகுப்பு பின்வருமாறு...

தனுஷ்

மென்மையான, கனிவான, நேர்மையான மனிதர் மறைந்து விட்டார். மிகவும் உற்சாகத்தோடு, உயிர்ப்போடு இருந்த இனிமையான மனிதர். கேவி ஆனந்த் சார், இவ்வளவு சீக்கிரமாக விட்டுச் சென்றுவிட்டீர்களே, இவ்வளவு சீக்கிரமாக. அவரது குடும்பத்துக்கு என் இரங்கல்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சார்

பாடகர் திப்பு

கேவி ஆனந்த் அவர்கள் நம்மோடு இல்லை என்பது அதிர்ச்சியாகவும், நம்புவதற்குக் கடினமாகவும் இருக்கிறது. அவ்வளவு பணிவான மனிதர், மிக நல்ல நண்பர். உங்கள் இழப்பை உணர்வேன் சகோதரரே.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த வருத்தத்துக்கு ஆளாகியிருக்கிறேன். உங்கள் இழப்பை உணர்வோம் சார். ஆன்மா சாந்தியடையட்டும்.

ஜெயம் ரவி

பெரிய அதிர்ச்சி, ஆழ்ந்த வருத்தம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் கேவி ஆனந்த் சார். அவரது குடும்பத்தினருக்கு மனமார்ந்த இரங்கல்கள், ஆறுதல்கள்,

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

பெரிய அதிர்ச்சி, முழுமையாக உடைந்துபோயிருக்கிறேன். நமது திரைத்துறையில் இருக்கும் மிக இனிமையான இயக்குநர்களில் ஒருவர். அற்புதமான மனிதர். நாங்கள் அனைவரும் உங்கள் இழப்பை உணர்வோம் சார். உங்கள் படங்களுக்கும், விட்டுச் சென்ற நினைவுகளுக்கும் நன்றி. உங்களுடன் பணியாற்றியது எங்களுக்குக் கிடைத்த பெருமை.

பாடகி ஷ்வேதா மோகன்

நம்பமுடியவில்லை. மிக மிக மோசமான செய்தி. அவரிடமிருந்து நமக்காக வர வேண்டிய படைப்புகள் இன்னும் நிறைய இருந்தன.

பாடகர் ஸ்ரீனிவாஸ்

54 வயதில் கேவி ஆனந்த் மறைந்துவிட்டார். நம்பமுடியவில்லை. அவருக்கு நெருக்கமானவர்களுக்கு என் அனுதாபங்கள்.

கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாஸ் மோகன்

கேவி ஆனந்த் சார் மறைவைக் கேள்விப்பட்டு மனமுடைந்து போனேன். அவரோடு பணியாற்றியது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். அந்த நினைவுகள் என்றும் என் மனதில் நீங்காமல் இருக்கும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

பிரசன்னா

இந்த கொடுமையான செய்தியைக் கேட்டு கண் விழித்தது பெரிய அதிர்ச்சியை, சோகத்தைத் தந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர்

ஒரு மோசமான செய்தியோடு கண்விழிப்பது எவ்வளவு கொடுமை. உண்மையை ஜீரணிப்பது மிகக் கடினமாக இருக்கிறது. ஆனந்த் சார், எனக்கு உந்துதல் தந்தவர்களில் ஒருவர் நீங்கள்.

தயாரிப்பாளர் தனஞ்ஜயன்

இதை நம்பமுடியவில்லை, அதிர்ச்சியைத் தருகிறது. உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? அவ்வளவு கண்ணியமான, அற்புதமான மனிதர். மிகச் சிறந்த நண்பர் கேவி ஆனந்த் அவர்கள். வாழ்க்கை உங்களிடம் நியாயமாக இல்லை. மனமுடைந்து போயிருக்கிறேன். நீங்கள் இல்லாத குறையை நாங்கள் அனைவரும் உணர்வோம்.

நடிகர் விக்ராந்த்

நம்பமுடியாத இந்தச் செய்தியைக் கேட்டு கண்விழித்தேன். எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு. நீங்கள் உண்மையில் மிகக் கண்ணியமான மனிதர், கனிவான மனம் கொண்டவர். உங்களோடு செலவிட்ட நேரத்தை, நீங்கள் எனக்குக் கற்றுத் தந்தவைகளை நான் மறக்கவே மாட்டேன். உங்கள் இழப்பை என்றுமே உணர்வேன் சார். லவ் யூ சார்.

ஹாரிஸ் ஜெயராஜ்

இந்த பேரதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்படது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். என் நண்பன் கேவி ஆனந்தின் ஆன்மா சாந்தியடையட்டும்.

நடிகர் கவுதம் கார்த்திக்

ஒரு அற்புதமான படைப்பாளியை நாம் இழந்துவிட்டோம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். அவர் குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்

ராதிகா சரத்குமார்

தீவிர மாரடைப்பின் காரணமாக இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த் மறைந்த செய்தியைக் கேட்டு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு அதிர்ச்சியடைந்திருக்கிறேன். மிகவும் இளமையான, திறமையான மனிதர். துறைக்குப் பேரிழப்பு,

வரலட்சுமி சரத்குமார்

கோவிட் நம்மிடமிருந்து சீக்கிரமாகப் பல நல்ல ஆன்மாக்களைக் கொண்டு செல்கிறது. கேவி ஆனந்த் சார் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். மிகவும் அச்சமாக இருக்கிறது. தயவுசெய்து எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள். முகக்கவசம் அணியுங்கள். கிருமி நாசினி பயன்படுத்துங்கள். அரசு சொல்லும் வரை காத்திருக்காதீர்கள்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன்

சென்று வாருங்கள் சார். உங்களை சந்தித்து உதவி ஒளிப்பதிவாளராக வாய்ப்பு வேண்டும் என்று கேட்ட நாளை மறக்க மாட்டேன். கடந்த வாரம் என்னை அழைத்து என் சமீபத்திய பணியை பாராட்டிதை மறக்க மாட்டேன். நீங்கள் தான் என்னை உருவாக்கினீர்கள். நான் படித்த செயல்விளக்கப் புத்தகம் நீங்கள் தான். உங்களுக்கு என்றும் என் அன்பும், மரியாதையும் இருக்கும்.

இயக்குநர் ஜெயேந்திரா

ஒரு அன்பு நண்பர், சக ஊழியர். பிசி ஸ்ரீராமிடம் இணைந்து தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். ஜேஎஸ் ஃபிலிம்ஸில் என்னுடன் சேர்ந்து பணியாற்றினார். ஒளிப்பதிவாளராக அவரது முதல் பணி என்னோட ஒரு விளம்பரத்தில் தான் ஆரம்பமானது. நமக்கு இன்னும் பல படைப்புகளைத் தரத் தயாராக இருந்த ஒரு இயக்குநரை இழந்தது அநியாயமாக இருக்கிறது. உங்கள் இழப்பை அதிகமாக உணர்வேன் கேவி ஆனந்த்.

பிசி ஸ்ரீராம்

உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் கேவி ஆனந்த். சீக்கிரமாக எங்களை விட்டுச் சென்றுவிட்டீர்கள். எப்போதும் என்னுள் ஒரு பகுதியாக நீங்கள் இருப்பீர்கள் நண்பரே. சென்று வாருங்கள்.

இயக்குநர் மோகன் ராஜா

இந்திய திரைத்துறையில், ஒளிப்பதிவிலும், இயக்கத்திலும் ஒரே நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்ட அரிய, விசேஷமான நபர்களில் ஒருவர். உயர்ந்த ஆன்மா. அவரது இழப்பை என்றும் உணர்வோம்.

மேலும், நடிகைகள் ரித்விகா, ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்வதி நாயர், அதுல்யா ரவி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, இயக்குநர்கள் பாலாஜி மோகன், ராஜேஷ், செல்வராகவன், திரு, பிஜோய் நம்பியார், இசையமைப்பாளர் இமான், நடிகர்கள் அசோக் செல்வன், அருண்விஜய், துல்கர் சல்மான், நிவின் பாலி, அசோக் செல்வன், விக்ரம் பிரபு, சிபி சத்யராஜ், உள்ளிட்டோரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்