'மாநகரம்' வெளியான நாள்: தரமும் தனித்துவமும் மிக்க இயக்குநரின் முதல்  தடம் 

By ச.கோபாலகிருஷ்ணன்

சென்னை மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் திரைப்படங்கள் அண்மைக்காலங்களில்தான் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அவற்றில் வெகு சில படங்கள் மட்டுமே மக்கள் வரவேற்பைப் பெறுகின்றன. இந்தப் பட்டியலில் 2017இல் இதே நாளில் (மார்ச் 10) வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் அனைவரையும் வியக்க வைத்து வணிக வெற்றியையும் பெற்ற 'மாநகரம்' திரைப்படம் முக்கியமானது.

வேலைக்காக சிற்றூரிலிருந்து சென்னைக்கு வரும் இளைஞனையும், அநியாயங்களைத் தட்டிக்கேட்கும் கோபக்கார இளைஞனையும் மையமாக வைத்து ஒரு அருமையான த்ரில்லர் படத்தைக் கொடுத்திருந்தார் இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக முதல் தடம் பதித்த லோகேஷ் கனகராஜ். வெவ்வேறு சூழ்நிலைகள், பல வகைப்பட்ட கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் எதிர்பாராமல் நிகழும் மோதல்கள், அவற்றின் பின்னணியாக அமையும் முடிச்சுகள் ஆகியவற்றுடன் திடீர் திருப்பங்கள் நிறைந்த சிக்கலும் சுவாரஸ்யமும் நிறைந்த திரைக்கதையின் வழியே பெருநகர வாழ்க்கையின் அபாயங்களையும் அதையும் தாண்டிச் சுடர்விடும் மனிதநேயத்தையும் பதிவுசெய்தது இந்தப் படம்.

சென்னையை வன்முறைக் களமாக வெளியிலிருந்து வருபவர்களுக்குத் தோன்றினாலும் இதே நகரத்தில்தான் முன்பின் தெரியாதவர்களுக்காக எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளும் நல்லுள்ளங்களும் இருக்கின்றன என்றும் அழுத்தமாகச் சொன்னது.

முதல் படத்திலேயே தனக்கென்று ஒரு தனிப் பாணியிலான திரைக்கதையும் தனித்துவமான காட்சி மொழியும் கொண்டிருப்பவர் என்பதை உணரவைத்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்' படத்தை அதிகம் அறியப்படாத நடிகர்களான சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா ஆகியோரை முதன்மைக் கதாபாத்திரங்களாக வைத்து அவர்களின் சிறப்பான பங்களிப்பைப் பெற்று அசத்தினார்.

இரண்டாவது படத்தில் கார்த்தி என்னும் நட்சத்திர நடிகருடன் கைகோத்தார். 'கைதி' என்று தலைப்பிடப்பட்ட அந்தப் படமும் லோகேஷ் கனகராஜின் தனித்தன்மைகள் நிரம்பிய படமாகவும் அனைவருக்கும் நிறைவளிக்கும் படமாகவும் அமைந்து வெற்றி பெற்றது. நாயகி இல்லை, பாடல்கள் இல்லை ஒரே இரவில் ஒரு முன்னாள் கைதியும் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட காவல்துறை அதிகாரிகளையும் ஒரு மாபெரும் கொள்ளைக் கூட்டத்தையும் முன்வைத்து தொடக்கம் முதல் இறுதிவரை பரபரப்பாக நகரும் படமாக அமைந்திருந்தது 'கைதி'.

இரண்டு தரமான வெற்றிப் படங்களுக்குப் பின் 'மாஸ்டர்' படத்துக்காக இன்றைய முதல் நிலை நட்சத்திரமான விஜய்யுடன் கைகோத்தார் லோகேஷ். இதில் மற்றொரு முன்னணி நட்சத்திரமான விஜய் சேதுபதியும் நடித்தார். இவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் இருவர் ஒரே திரைப்படத்தில் அதுவும் இரண்டே திரைப்படங்களில் தன் அசாத்திய திறமையை நிரூபித்துவிட்ட இயக்குநருடன் இணைந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. இடையில் கோவிட்-19 பெருந்தொற்றால் நீண்ட தாமதத்துக்குப் பிறகு கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான 'மாஸ்டர்' எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றி வசூல் சாதனை படைத்தது. அதேபோல் தன்னுடைய பாணியைச் சமரசம் செய்யாமல் விஜய், விஜய் சேதுபதி இருவரின் பிரம்மாண்டத் திரை ஆளுமைக்கும் நியாயம் செய்யும் வகையில் திரைக்கதையையும் மாஸ் காட்சிகளையும் அமைத்து ரசிகர்களைத் திருப்தி செய்ததோடு சிறார் சீர்திருத்தப் பள்ளிகளில் நிகழும் அவலங்களை அவற்றுக்குப் பின்னால் இயங்கும் கயவர்களைத் தோலுரித்து 'மாஸ்டர்' படத்தைத் தன்னுடைய படைப்புத் திறனுக்கு நியாயம் செய்யும் கிளாஸ் படமாகவும் தந்திருந்தார் லோகேஷ்.

தற்போது லோகேஷ் தன்னுடைய ஆதர்ச நாயகரான கமல்ஹாசனை நாயகனாக வைத்து 'விக்ரம்' என்னும் திரைப்படத்தை இயக்குவதற்கான முதல்கட்டப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். கமல் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளம் இயக்குநர் ஒருவருடன் கைகோத்திருக்கிறார். கடந்த நவம்பர் 7 கமல் பிறந்த நாள் அன்று வெளியான படத்தின் டைட்டில் டீஸர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வேறோரு உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஆழ்ந்திருக்கும் கமல் தேர்தலுக்குப் பிறகு நடித்து இந்த ஆண்டுக்குள் வெளியாகவிருக்கும் 'விக்ரம்' கமல் ரசிகர்களுக்கும் லோகேஷ் கனகராஜ் மீதான எதிர்பார்ப்புடன் திரையரங்குக்குச் செல்பவர்களுக்கும் தரமான விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

தான் இதுவரை இயக்கியுள்ள மூன்று திரைப்படங்களில் உள்ளடக்கத்திலும் உருவாக்கத்திலும் தனித்துவத்தைத் தக்க வைப்பதோடு படத்துக்குப் படம் ஏறுமுகத்துடன் பயணிக்கும் லோகேஷ் கனகராஜ், இந்தத் தலைமுறை இளம் இயக்குநர்களில் மிகவும் மதிக்கப்படும் இயக்குநராக உயர்ந்திருக்கிறார். அவர் இயக்கிய முதல் படம் வெளியான இந்த நாளில் அவர் திரைப்படத் துறையில் மேன்மேலும் பல சாதனைகள் புரியவும் விருதுகளைக் குவிக்கவும் மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

40 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்