யூடியூப் பகிர்வு: ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜாவுடன் ஒரு கலந்துரையாடல்

'ஆரண்ய காண்டம்' தமிழ்நாட்டில் இந்த வார்த்தைகளை 2011-ஆம் ஆண்டுக்கு முன் கேட்டவர்களுக்கு ராமாயணம் தான் நினைவுக்கு வந்திருக்கும். அதற்குப் பின் கேட்டவர்களில் சினிமா ஆர்வலர்களுக்கு சர்வ நிச்சயமாக தியாகராஜன் குமாரராஜா என்ற பெயர் தான் நினைவுக்கு வரும்.

தமிழ் திரையுலகில், சினிமா ஆர்வலர்கள் மத்தியில் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் 'ஆரண்ய காண்டம்'. வெளியான 4 ஆண்டுகள் கழித்தும், யாராவது இந்தப் படத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் உடனே கண்கள் விரிய, பலர் அவர்களோடு கலந்து பேசி சிலாகிக்கும் சூழலை காண முடிகிறது.

இந்தியாவில் வெளியாகும் முன்னரே சர்வதேச பட விழாவில் விருது வென்ற படம் என்ற பெருமையோடும், இந்தியாவில் சென்சாரோடு சிக்கல் என சர்ச்சையோடு வெளியான 'ஆரண்ய காண்டம்', வெளியான சமயத்தில் ஓடாத நல்ல படம் என்ற வகையில் சேர்ந்துவிட்டது. ஆனால் வெளியாகி, சரியாக ஓடாமல், பெட்டிக்கே திரும்பி, பிறகு இப்படியான ஒரு உயரத்தில் வேறெந்த படமும், இயக்குநரும் ஆராதிக்கப்படுவதாக தெரியவில்லை. எண்ணற்ற கட்டுரைகள், வலைப்பதிவுகள், பேச்சுக்கள் என ஆரண்ய காண்டத்தைப் பற்றி இன்றளவும் ஏதேனும் ஒரு விமர்சனமோ, மதிப்புரையோ, ஆராய்ச்சிக் கட்டுரையோ வந்து கொண்டே தான் இருக்கின்றன.

இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'ஆரண்ய காண்டம்' திரையிடப்பட்ட போது அதைக் காண வந்த ரசிகர் கூட்டமும், அதற்கு கிடைத்த வரவேற்பும் கண்ணால் கண்டவர்களால் மட்டுமே விவரிக்க முடிந்த ஒரு அனுபவம். எந்த ஒரு சூப்பர் ஸ்டார் படத்துக்கும் கிடைக்கும் முதல் நாள் வரவேற்பைப் போலவே அது இருந்தது.

எடுக்கப்பட்டது வேறு வேறு வகையான படங்கள் என்றாலும், ’அவள் அப்படித்தான்’ எடுத்த ருத்ரய்யாவைப் போலவே ’ஆரண்ய காண்டம்’ தியாகராஜன் குமாரராஜாவும் போற்றப்படுகிறார். இத்தனைக்கும் குமாரராஜா தனது இரண்டாவது படத்தை இன்னமும் தொடங்கவில்லை.

இப்படியான நிலையில் சென்னையில், பனுவல் புத்தக நிலையம் ஏற்பாடு செய்திருந்த ’ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் விசேஷ திரையிடல் தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. படத்தை காணும் ஆவலோடு இருந்த எண்ணற்ற ஆர்வலர்களுக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும், அன்றைய தினம், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் ஏமாற்றத்துக்கு ஈடுகட்டிவிட்டது. அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 3-வது பகுதி வீடியோவிலிருந்து இயக்குநர் பேசுகிறார்.

பகுதி 1

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE