முதல் பார்வை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

By செய்திப்பிரிவு

துல்கர் சல்மான் மற்றும் ரக்‌ஷன் இருவருமே மாடர்ன் ஹை டெக் இளைஞர்கள். பார்ட்டி, பெண்கள் எனச் சுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, ரீத்து வர்மா மீது காதல் கொண்டு, தன் காதலைச் சொல்கிறார் துல்கர் சல்மான். அவரும் காதலை ஒப்புக்கொள்ள, இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். ரக்‌ஷனும், ரீத்து வர்மாவுக்கு தோழியாக வரும் நிரஞ்சனாவைக் காதலிக்கிறார். நால்வரும் நண்பர்களாகிறார்கள். அப்போது துல்கர் சல்மான் - ரக்‌ஷன் இருவருமே தொழில்நுட்பத்தை மையப்படுத்தி திருட்டுச் சம்பவங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது தெரியவருகிறது.

அதில் ஒரு சம்பவத்தில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் கவுதம் மேனன் பாதிக்கப்படுகிறார். அப்போது ஏன் இப்படியானது என்று விசாரிக்கத் தொடங்குகிறார். இருவரையும் கண்டுபிடிக்க பல்வேறு முயற்சிகள் செய்தும் அவர்கள் தப்பிக்கிறார்கள். இதற்குப் பிறகு கவுதம் மேனன் கண்டுபிடித்தாரா, ரீத்து வர்மா என்ன ஆனார், காதல் கைகூடியதா என்பதை எல்லாம் ரொம்ப சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.

ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக நடக்கும் திருட்டு, கார் லாக்கை எப்படி திறக்கலாம், ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள தொழில்நுட்ப பிரச்சினை என்பது போன்ற சில சுவாரசியங்களைக் கொண்டு நல்லதொரு திரைக்கதை அமைத்து அப்ளாஸ் அள்ளுகிறார் அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி. ஒவ்வொரு காட்சிக்குமே அவர் சொல்லியிருக்கும் நுணுக்கங்கள் அட போட வைக்கின்றன. இப்படியெல்லாம் நமக்கு நடக்காமல் இருக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றுகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு ஆன்லைனில் பொருள் ஏதேனும் வாங்கினால் ஒன்றுக்கு இரண்டு முறை செக் பண்ணப் போவது நிச்சயம்.

தொழில்நுட்பத்தை மையப்படுத்தித் திருடும் இளைஞராக நடித்துள்ளார் துல்கர் சல்மான். அதற்கான நம்பகத்தன்மையை உருவாக்கும் விதத்தில் நிறைவாக நடித்துள்ளார். இவரது நண்பராக ரக்‌ஷன். முதல் படமாக இருந்தாலும், தனக்கான கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார். 'மச்சான்.. எனக்கு கால் பண்ணு' என்று தனது ரிங்டோன் மூலமாகவே பதில் சொல்லும் காட்சி அற்புதம். ஆனால், சில காட்சிகளில் இவருடைய வசன உச்சரிப்பு கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தவும் தவறவில்லை.

நாயகியாக ரீத்து வர்மா. முதலில் கொஞ்சம் சோகமாக இருக்கும் இவருடைய பாத்திர அமைப்பு பின்னால் இருக்கும் மாற்றம் என கச்சிதம். வெறும் காதல் காட்சிகள், பாடல்கள் என்றில்லாமல் முக்கியமான கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. இவருடைய தோழியாக இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா. இந்தப் படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்து கொண்டே முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வசனங்கள் குறைவுதான் என்றாலும், சில காட்சிகள் கெத்தாக நின்று கொண்டு பார்வையில் பதில் சொல்லி ரசிக்க வைக்கிறார்.

இவர்களைத் தவிர்த்து படத்தில் மிகவும் ரசிக்க வைக்கிறார் இயக்குநர் கவுதம் மேனன். 'என்னடா ஸ்கெட்ச்சா' என இவருடைய அறிமுகக் காட்சியே செம மாஸ். பின்பு இவருடைய துப்பறியும் பாணி, நடை, உடை என முழு நடிகராக கவுதம் மேனன் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து இவருக்கு இன்னும் பல வாய்ப்புகள் வருவது உறுதி. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் நடிக்க எப்படி ஈகோ இல்லாமல் ஒப்புக்கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம். அதற்கு வாழ்த்துகள்.

நடிகர்களைத் தாண்டி படத்தின் ஒளிப்பதிவு தரமாக இருந்தது. சென்னை, டெல்லி, கோவா என கே.எஸ்.பாஸ்கரன் விளையாடியிருக்கிறார். பல இடங்களில் டாப் ஆங்கிள் காட்சிகளை ரொம்பவே கச்சிதமாகப் பயன்படுத்தி இருக்கிறார். இவருடைய உழைப்பு படத்தைப் பிரம்மாண்டமான படமாகக் காட்டியிருக்கிறது.

ஒளிப்பதிவைத் தொடர்ந்து அடுத்த பாராட்டு எடிட்டர் பிரவீன் ஆண்டனிக்குத்தான். சேஸிங் காட்சிகள், தொழில்நுட்ப ரீதியிலான க்ரைம் காட்சி மான்டேஜ் என ரொம்பவே மெனக்கெட்டுள்ளார். ஆனால், இன்னும் கொஞ்சம் காட்சிகளைக் கத்தரித்திருக்கலாம். மசாலா காஃபி இசையில் பாடல்கள் அனைத்துமே ரொம்பவே சுமார். ஹர்ஷவர்த்தனின் பின்னணி இசையில், சில இடங்களில் இரைச்சல், சில இடங்களில் கச்சிதம்.

படத்தின் தொடக்கத்தில் வரும் காதல் காட்சிகள் ரொம்பவே பொறுமையைச் சோதிக்கின்றன. அதைத் தாண்டி துல்கர் சல்மான் - ரக்‌ஷன் இருவருமே திருட ஆரம்பிக்கும் காட்சியில் தொடங்கி, படம் முடியும் வரை சுவாரசியம் குறையாமல் நகர்கிறது படம். ஒவ்வொரு திருட்டுக்குமே விரிவாகக் காட்சிகள் அமைத்து சுவாரசியப்படுத்தியுள்ளனர். படத்தின் தலைப்பைப் பார்த்து காதல் படமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். படத்தின் இடைவேளைக் காட்சி செம ட்விஸ்ட். இரண்டாம் பாதி முழுக்கக் கொள்ளையடிக்கும் பாதைக்குத் திரும்புகிறது திரைக்கதை. ஆனால், அதிலும் தேவையில்லாத காட்சிகள் எதுவும் இல்லை.

இந்தப் படம் இப்படித்தான் இருக்கும் என ஒருசில படத்துக்குச் சொல்வோம். ஆனால், அதற்கு நேரெதிராக படம் அற்புதமாக இருக்கும். அந்த வகையில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்துக்கு ஒரு விசிட் அடிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

தமிழகம்

1 min ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்