தமிழ் சினிமா

கமல் - ரஜினியைக் கடந்து வென்றான்... ‘மலையூர் மம்பட்டியான்’

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


கமலுக்கும் ரஜினிக்கும் வரிசையாக வந்து படங்கள் வெற்றி பெற்ற அதேவேளையில், தியாகராஜன் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றான். அதுமட்டுமின்றி, டிரெண்ட் செட்டர் படமாகவும் அமைந்தது இந்தப் படம்.


83-ம் ஆண்டு, கமலுக்கும் படங்கள் வந்து வெற்றி பெற்றன. அதேபோல் ரஜினிக்கும் வெற்றியைக் கொடுத்த படங்கள் ஏராளம். கமலுக்கு ‘தூங்காதே தம்பி தூங்காதே’ 200 நாள் ஓடிய படமாக அமைந்தது. அதேபோல், ‘தங்கமகன்’ படம், ரஜினிக்கு வெள்ளிவிழாவைத் தாண்டி ஓடுகிற படமாக அமைந்தது.


மணிவண்ணனின் ‘இளமைக்காலங்கள்’ திரைப்படம் வெள்ளிவிழாப் படமாக அமைந்தது. டி.ராஜேந்தரின் பாய்ச்சல் இந்த வருடத்தில் இருந்துதான் டேக் ஆஃப் ஆனது. கல்யாணம், காதுகுத்து என எல்லா வீடுகளிலும் ‘உயிருள்ள வரை உஷா’வும் ‘தங்கைக்கோர் கீதம்’ படப் பாடல்களும் ஒலிபரப்பாகிக் கொண்டே இருந்தது.


பாரதிராஜா ‘மண்வாசனை’ எடுத்தார். மதுரையில் ஒருவருடம் கடந்து ஓடியது. அதேபோல் பாக்யராஜ் ‘முந்தானை முடிச்சு’ எடுத்தார். இதுவும் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.


இந்தக் காலகட்டத்தில்தான், இந்த வருடத்தில், ராஜசேகர் இயக்கத்தில், ‘மலையூர் மம்பட்டியான்’ திரைப்படம் வெளியானது.தியாகராஜன் மம்பட்டியான் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரின் ஹேர் ஸ்டைலும் லேசான தாடியும் முகமும் கண்களும் அந்தக் கேரக்டருக்கு சரியாகப் பொருந்தின. போதாக்குறைக்கு அவரின் குரல், அட்டகாசமாகப் பொருந்தியது.


படத்தின் நாயகி சரிதா. மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். அதேபோல், ஜெயமாலினியும் சில்க் ஸ்மிதாவும் நடித்திருந்தார்கள். கவுண்டமணியின் வில்லத்தனம் ரசிக்க வைத்தது. இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. அதேபோல், டைட்டில் பாடலை பாடியிருப்பார் இளையராஜா. ‘காட்டுவழி போற பொண்ணே கவலைப்படாதே’ என்ற டைட்டில் பாட்டு, செம ஹிட்டு.
பழிக்குப் பழி வாங்கும் கதைதான். ராபின் ஹுட் மாதிரியான கதைதான். காதலை கவிதையாகச் சொன்னதும் இதில் உண்டு. காமெடியும் கவர்ச்சியும் உண்டு. ஆனாலும் இப்படியாக எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், அத்தனையும் கலந்து வந்த ‘மலையூர் மம்பட்டியான்’ ஆகச்சிறந்த டிரெண்ட் செட்டர் படமாக அமைந்தது.


இப்படியாக படமெடுத்தால், வெற்றி நிச்சயம். முதலுக்கு மோசமில்லை என்கிற உத்தரவாதத்தைத் தந்தது ‘மலையூர் மம்பட்டியான்’. இந்தப் படத்துக்குப் பிறகு தியாகராஜனுக்கு இதேமாதிரியான படங்கள் வரிசைகட்டி வந்தன. அதில் ஓரிரு படங்களே நல்ல கதையோடு வந்தன. அதேபோல், தியாகராஜனை மம்பட்டியான் தியாகராஜன் என்றே ரசிகர்கள் அழைத்தார்கள்.


எண்பதுகளில், மறக்க முடியாத படங்களில், ‘மலையூர் மம்பட்டியான்’ திரைப்படமும் ஒன்று.

SCROLL FOR NEXT