தமிழ் சினிமா

'விஸ்வாசம்' ஹேஷ்டேக் முதலிடமா? - ட்விட்டர் நிறுவனம் விளக்கம் 

செய்திப்பிரிவு

'விஸ்வாசம்' ஹேஷ்டேக் முதலிடம் குறித்து வெளியான புகைப்படங்கள் தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

2019-ம் ஆண்டு இந்தியாவில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய ஹேஷ்டேக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் தளம். அதில் 'விஸ்வாசம்' முதல் இடத்தைப் பிடித்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகியவைத் தாண்டி 'விஸ்வாசம்' படத்தைப் பற்றியே அதிகம் பேர் பேசியுள்ளது உறுதியாகி இருக்கிறது.

இது தொடர்பாகப் புகைப்படங்கள் ட்விட்டர் தளத்தில் வெளியாகின. இதை வைத்து அஜித் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். இதனிடையே ட்விட்டர் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டர் இந்தியா ட்விட்டர் பதிவில், "இந்த ட்வீட் குறித்து நீங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது எங்களுக்கும் ஆர்வத்தைத் தருகிறது. ஆனால் இது இந்த வருடம் தாக்கத்தை ஏற்படுத்திய சில விஷயங்களின் பிரதிநிதித்துவமே. 2019ல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட விஷயங்கள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலுக்கு நீங்கள் இன்னமும் சற்று காத்திருக்க வேண்டும்.

அதுவரை, இந்த வருடத்தின் ட்விட்டர் பட்டியலில் ஒரு தமிழ்ப் படம் இடம்பெறுமா? இடம்பெறும் என்றால் எந்தப் படத்தைப் பற்றி அதிகம் ட்வீட் செய்யப்படும் என்று சொல்லுங்களேன்" என்று தெரிவித்துள்ளது. இதனுடன் 'விஸ்வாசம்', 'பிகில்', 'என்.ஜி.கே' மற்றும் உங்கள் விருப்பம் என வாக்கெடுப்பு ஒன்றையும் தொடங்கியுள்ளது.

ட்விட்டர் இந்தியாவின் இந்த ட்வீட்டால் அஜித் ரசிகர்களின் உற்சாகத்துக்கு கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், 'விஸ்வாசம்' திரைப்படம் ஜனவரியில் வெளியான படம் என்பதால் தொடர்ச்சியாக அந்தப் படம் குறித்த ட்வீட்கள் இருக்கும். இதனால் ட்விட்டர் தளம் வெளியிடும் பட்டியலில் 'விஸ்வாசம்' இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்.

SCROLL FOR NEXT