இந்த நிலைக்கு வர அப்பா நிறைய போராடியிருக்கிறார்: துருவ் விக்ரம் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

இந்த நிலைக்கு வர அப்பா நிறைய போராடியிருக்கிறார் என்று கேரளாவில் துருவ் விக்ரம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

சந்தீப் வாங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இதன் இந்தி ரீமேக்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் ரீமேக்கான 'ஆதித்ய வர்மா'வில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

தற்போது அனைத்துப் பணிகளும் முடிந்து நவம்பர் 21-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டு பேசி வருகிறது படக்குழு. நேற்று (நவம்பர் 6) இந்தப் படத்தின் மலையாளப் பதிப்பின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி கேரளாவில் நடைபெற்றது.

அங்கு திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி விழா ஒன்றில் 'ஆதித்ய வர்மா' படக்குழு கலந்து கொண்டது. அதில் விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் ப்ரியா ஆனந்த் கலந்து கொண்டார்கள். அப்போது அந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கியவர் துருவ் விக்ரமிடம் 'எந்த நடிகர் நிஜமாகவே பணிவானவர்' என்று கேட்டதற்கு 'தளபதி விஜய்' என்றும், 'யார் உங்கள் உண்மையான உந்துதல்' என்ற கேள்விக்கு 'சீயான் விக்ரம்' என்று பதில் அளித்துள்ளார்.

மேலும் கேரளாவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது துருவ் விக்ரம், "நான் இங்கு உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருப்பதற்குக் காரணம் என் அப்பாதான். அவரது பெயரை நான் தவறாகப் பயன்படுத்த விரும்பவில்லை. இந்நிலைக்கு அவர் நிறைய போராடியிருக்கிறார். பெரிய சூப்பர் ஸ்டாராக ஆன பின்னும் அவருக்குப் போராட்டம் இருந்திருக்கிறது.

’ஆதித்ய வர்மா’வின் ஒவ்வொரு ஷாட் படமாக்கப்பட்ட போதும் அவர் இருந்தார். டப்பிங் பேசும்போது அப்பா ஒவ்வொரு நடிகருடனும் இருந்தார். அவர் சொன்னதைத்தான் நான் அப்படியே செய்தேன். எனவே அவரது இன்னொரு வடிவத்தைத்தான் என் மூலமாகப் பார்க்கப் போகிறீர்கள்.

என் அப்பா இல்லாமல் எப்படி அடுத்த படத்தில் நடிக்கப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. அடுத்த இரண்டு வருடங்களில் அவரிடம் அனைத்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார் துருவ் விக்ரம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE