கமல் ஏற்கத் தயங்கும் கதாபாத்திரம்

By சுகுமாரன்

இன்று இருக்கும் இந்திய நடிகர்களில் கமல் ஹாசன் அளவுக்குச் சினிமாவுடன் இரண்டறக் கலந்த நபர் அநேகமாக யாருமில்லை. நான்கு வயதில் ஆரம்பித்து இன்றும் தொடர்ந்து களத்திலிருக்கும் நடிகர் இல்லை. 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்று இறைஞ்சிய அந்தப் பிஞ்சு முகத்துக்கும் 'யாரென்று தெரிகிறதா, இவன் தீ என்று புரிகிறதா?' என்று நிமிர்கிற விஸ்வரூபத்துக்கும் இடையில் அரை நூற்றாண்டுக் காலம் ஓடிப்போயிருக்கிறது. அதில் தமிழ்சினிமாவின் ஐம்பதாண்டுக் காலமும் அடங்கியிருக்கிறது.

உலகம் முழுவதும் சினிமா இரண்டு வகையாகவே பார்க்கப்படுகிறது. பொழுதுபோக்க உதவும் கேளிக்கைச் சாதனமாகவும் கலையாகவும். அண்மைக் காலத்தில் மிகவும் கலைத்தன்மையுள்ள படங்கள் தயாரிக்கப்படும் நாடாகச் சிறப்பிக்கப்படும் கொரியாவில்தான் மிக மிகுதியான கேளிக்கைப் படங்களும் போர்னோகிராஃபி சினிமாக்களும் தயாராகின்றன என்பது இயல்பான முரண். சமூகத்தின் தேவை. ஆனால் அந்த நாட்டின் மிகச்சிறந்த படம் என்று உலகின் கவனத்துக்கு வந்து சேருவது கலைத்தன்மையுள்ள படங்கள் மட்டுமே. பிரபலமான நடிகர்கள் என்றும் வசூல் ராஜாக்கள் என்றும் கொண்டாடப்படுபவர்கள் இரண்டு வகைப் படங்களிலும் தங்கள் பங்களிப்பைச் செலுத்துகிறார்கள். ஹாலிவுடின் கௌபாய் படங்களிலும் அடிதடிப் படங்களிலும் நடித்துப் பெயர் வாங்கியவர் கிளிண்ட் ஈஸ்ட்வுட். அவர் நடித்து இயக்கிய படம் 'தி பிரிட்ஜஸ் ஆஃப்மாடிஸன் கவுண்டி'. அந்தப்படத்தைத் தயாரித்து இயக்கி நடிக்கக் காரணம் என்ன என்ற கேள்விக்கு அவரது பதில்: 'நான் வாழ்க்கைக்கு நெருக்கமான படங்கள் மூலம் நினைவுகொள்ளப்பட விரும்புகிறேன்'.

சினிமாவைக் கேளிக்கைத் தொழில் என்பதைத் தாண்டி கலையாகவும் எண்ணும் எந்த நடிகரும் இதையே சொல்லியிருப்பார். ஏனெனில் வாழ்க்கைக்கு நெருக்கமான படங்களைத்தாம் ஒரு நாடு தனது அடையாளமாக உலகின் பார்வைக்கு வைக்க முடியும். அந்தப் படங்கள் மூலமே கதாபாத்திரங்களும் நடிகர்களும் நினைக்கப்படுவார்கள். அவையே வரலாற்றில் இடம்பெறும். ஹாலிவுட் தனது சிறந்த படமாகச் சொல்வது ஜேம்ஸ்பாண்ட் படங்களை அல்ல. இன்றளவும் உலகின் பார்வையில் மிகச் சிறந்த படமாகக் கருதப்படும் ஆர்ஸன் வெல்ஸின் 'சிட்டிசன் கேன்' என்ற படத்தையே. அதில் ஒரு காலகட்டத்தின் அமெரிக்க வாழ்க்கைச் சித்தரிப்பு இருக்கிறது. வாழ்க்கைக்கு நெருக்கமான கலையின் பிரதிபலிப்பு இருக்கிறது. தமிழில் இதுவரை உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான படங்களிலிருந்து தமிழ் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம், பண்பாட்டின் சாயலைக் கொண்ட படம் என்று எத்தனைப் படங்களை நம்மால் உலகின்முன் வைக்கமுடியும்?

கமல்ஹாசன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்காளி உள்ளிட்ட மொழிகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நூற்றுக்கும் மிகுதியான கமலின் தமிழ்ப் படங்களிலிருந்து நமது வாழ்க்கைக்கு நெருக்கமான எத்தனைப் பாத்திரங்களைப் பார்க்கமுடியும்? 'பதினாறு வயதினிலே' கோபாலகிருஷ்ணனைப் போன்ற ஒற்றைக் கை விரலில் எண்ணக்கூடிய பாத்திரங்களைத்தான் பார்க்க முடியும். வெவ்வேறு பாத்திரங்களைக் கையாண்டிருப்பவர் கமல் ஹாசன். வெவ்வேறு வட்டார மொழிகளைப் பேசும் பாத்திரங்களைச் சித்தரித்திருக்கிறார். பலவட்டார மொழிகளைப் பேசுபவராக நடித்திருந்தாலும் அந்தப் பாத்திரங்கள் எல்லாமும் வெறும் கேலிச்சித்திரங்களாகவே உருவானவை. 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ஸிலும் 'பம்மல் கே சம்பந்த’த்திலும் அவர் பேசும் சென்னைத் தமிழை அந்த அளவு அநாயாசத்துடன் பேசக்கூடிய நடிகர்கள் குறைவு. ஆனால் சென்னைத் தமிழ் பேசும் ஒரு மனிதனின் மனதை அது வெளிப்படுத்துவதில்லை. மாறாக அந்த மொழியைப் பேசுகிறவனைப் பற்றிய கேலிச் சித்திரத்தையே அளிக்கிறது. பெரும் அவலம் நடைபெற்ற ஒரு நிலப்பகுதியிலிருந்து வந்த ஈழத்தமிழன் வெறும் கார்ட்டூன் ‘தெனாலி’யாவது கமலின் உபயம்.

ஏனெனில் இந்தப் பாத்திரங்களின் பின்னணியோ அவர்களது மனமோ இங்கே பொருட்படுத்தப்படுவதில்லை. அந்தப் பின்னணியைச் சுவாரசியமான ஒரு தளமாகப் பார்த்துக் கேளிக்கையான கதாபாத்திரங்களையே உருவாக்குகிறார். மிக அரிதான பாத்திரங்களை அவரே செய்திருக்கிறார் என்பது இனிய முரண். தேவர்மகன், விருமாண்டி, மகாநதி போன்ற பாத்திரங்கள் எடுத்துக்காட்டு.

இதைக் குற்றச்சாட்டாகவே எழுப்பலாம். கமலஹாசன் தன்னைச் சுற்றியிருக்கும் சமூகத்தின் அனுபவங்களிலிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லை. தன்னை அதற்குக் கொடுக்கவே முனைப்பு காட்டுகிறார். தமிழ்நாட்டு இளைஞனின் வேலை இல்லாத் திண்டாட்டத்தைச் சித்தரிக்க ஜாவேத் அக்தரின் இந்திக் கதையைக் கடன் வாங்கி 'சத்யா'வாகக் கொடுக்கவும் தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கத்தவனின் சீற்றத்தை நீரஜ் பாண்டேயின் 'எ வெட்னஸ்டே'யிலிருந்து இரவல் வாங்கி 'உன்னைப் போல ஒருவன்' என்று சொல்லவுமே அவரால் முடிகிறது. சினிமாவுக்கு மொழி தடையில்லை என்று வாதிடலாம். சினிமாவின் காட்சி மொழிக்குப் பேதமில்லை. ஆனால் அதன் களத்துக்கு வேறுபட்ட மொழியும் நிலப் பின்னணியும் இருக்கவே செய்கின்றன. கலையின் பின்னணி அதன் பண்பாட்டைச் சார்ந்தது. அதையொட்டியே அதன் அழகியல் உருவாகும். இதை நன்கு அறிந்தும் ஏற்க மறுப்பவராகவே கமல்ஹாசன் தென்படுகிறார்.

சினிமாவுக்கு அப்பாற்பட்ட கமல்ஹாசனின் இன்னொரு தோற்றம் அதை உறுதி செய்கிறது. அவருக்குள் இருக்கும் பெரியாரிய வாஞ்சை, தமிழ் மீதான காதல், சமூகக் கரிசனங்கள் இவை அதற்குச் சாட்சிகள். ஆனால் அவரது அழகியல் இந்தக் கூறுகளால் உருவானதல்ல; ஹாலிட்டின் வணிக வெற்றிகளை முன்னோடியாகக் கொண்டது. இதுவரை அடைய வேண்டிய இலக்கு என்று அவர் முன்னிருந்தது ஆஸ்கர் விருது. அதை விடவும் மிக உயர்ந்த விருதான கான் திரைப்பட விருதை அவர் எந்தச் சந்தர்ப்பத்திலாவது குறிப்பிட்டிருக்கிறாரா?

ஒரு கலைஞனாகத் தனது சமூகத்தின் அடையாளங்களை முன்வைக்கும் படைப்புகளைக் கமலஹாசன் உருவாக்கவில்லை என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. அவ்வாறான மாற்று முயற்சிகள் உருவாகும் சூழலில் அவற்றுக்கு நேர் எதிரான சமாச்சாரங்களுடன் வந்தார் என்பதையும் அதிக வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. எண்பதுகளில் தமிழில் சில வித்தியாசமான படங்கள் வெளிவந்து ரசனையை மாற்றவிருந்த தருணத்தில் அவர் வந்தது தூக்கலான மசாலா நெடியுள்ள 'சகலகலா வல்லவனா'க. பின்னர் அதை குறித்து அவரே வருந்தவும் செய்தார். ஆனால் அதே தவற்றையே அண்மைக் காலங்களிலும் செய்தார். 'காதல்', பருத்தி வீரன், சுப்ரமணியபுரம்' என்று உள் நாட்டு படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியபோது அவர் வந்தது ஹாலிவுட் கேளிக்கைப் படமான 'தசாவதார'த்துடன்.

மலையாள நட்சத்திரமான மோகன்லால் இதுவரை தயாரித்த படங்கள் மாற்றுத் திரைப்படங்கள். பெரும்பாலும் மசாலா படங்களிலேயே நடித்த சௌந்தர்யா, கன்னடத்தில் தயாரித்தது கிரிஷ் காசரவள்ளி இயக்கிய 'த்வீபா'வை. அசட்டுப் பாத்திரங்களிலும் நடித்த அனுபம் கெர் தயாரிப்பாளராக ஆனது ஜானு பருவா இயக்கிய 'நான் காந்தியைக் கொல்லவில்லை' என்ற படத்துக்காக. இவையெல்லாம் மாற்றுப்படங்கள். அந்தந்த மண்ணின் மனதைப் பேசும் படங்கள். அப்படி ஒரு முயற்சியைத் தமிழில் கமல்ஹாசனால் செய்ய முடியாமல் போனது ஏன்?

“ஜன்ஜீர் படத்தின் கோபக்கார இளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் கண்ணா எனக்குக் கொடுத்த விளம்பரத்தை விட ரிதுபர்ணா கோஷின் 'லாஸ்ட் லியர்' படத்தின் ஹரிஷ் மிஸ்ரா பாத்திரம் தந்தப் புகழ்தான் என் மனதுக்கு நிறைவைத் தந்தது' என்று அமிதாப் பச்சன் குறிப்பிட்டார். கமலஹாசன் அப்படிச் சொல்லக்கூடிய பாத்திரமும் படமும் என்னவாக இருக்கும்?

கமல்ஹாசன் முயன்றால் தமிழ் திரைப்படத்தின் தரம் இன்னும் உயரும். நாம் ஹாலிவுடை நிமிர்ந்து பார்ப்பதை விட்டு உலகம் நமது சினிமாவைப் பார்க்கும் காட்சியைக் கண்டுகளிக்கலாம். அதைச் செய்யும் வல்லமை அவருக்கே இருக்கிறது. அது சமகாலக் கலைஞனின் கடமை. அப்படியான பாத்திரத்தை ஏற்கும்படிக் கேட்கும் உரிமை கமல்ஹாசன் என்ற கலைஞனை நம்பும் ரசிகர்களுக்கு உண்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்