குரலரசி’ ஸ்வர்ணலதா; இன்று பிறந்தநாள்

By வி. ராம்ஜி

'எமனுக்கு

எழுதப்படிக்கத் தெரியாது போலும்.

அதனால்தான்

ஓர் கவிதைப்புத்தகத்தை

கிழித்துப்போட்டுவிட்டான்!’

என்று கவியரசு கண்ணதாசனின் மறைவின் போது, கவிஞர் வாலி இப்படிக் குறிப்பிட்டார்.

அதேபோல்,

காற்றுக்குக் காது கேட்காது போல.

அதனால்தான்

குயிலோசையை நிறுத்திவிட்டான்.

அந்தக் குயிலோசைக்குச் சொந்தமானவர்... ஸ்வர்ணலதா.

பாலக்காட்டில் பிறந்து வளர்ந்த ஸ்வர்ணலதாவின் குடும்பமே இசைக்குடும்பம்தான். வீட்டில் எல்லோருக்கும் இசைக்கும் என ஓர் பந்தம் இருந்துவந்தது. அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த ஸ்வர்ணலதா, சென்னைக்கு வந்தார். திரையுலகில் பின்னணிப் பாடகியாக வரவேண்டும் என்பதே அவர் ஆசை.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் வந்து வாய்ப்பு கேட்டார். ‘எங்கே பாடு?’ என்றார் எம்.எஸ்.வி. ஏவிஎம் தயாரித்த, சிவாஜி நடித்த ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் வரும் ‘பால்போலவே...’ என்ற பாடலைப் பாடிக்காட்டினார்.

பாடிய விதம், அந்தக் சந்தனக்குரல், குரலின் குழைவு எல்லாமே பிடித்துப் போனது எம்.எஸ்.விக்கு. அடுத்த வருடமே... அதாவது 87ம் வருடம், கலைஞரின் கதை, வசனத்தில், எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான ’நீதிக்கு தண்டனை’ படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார்.

மகாகவி பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ என்ற பாடல்தான் ஸ்வர்ணலதாவுக்கு முதல்படம். ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலைப் பாடும்போது அவர், சின்னஞ்சிறு குயில்தான். பிறகு இளையராஜா அழைத்தார். தொடர்ந்து பாடுவதற்கு வாய்ப்பு வழங்கினார்.

விஜயகாந்தின் 100வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் ’ஆட்டமா தேரோட்டமா...’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது. அந்தக் குரலில் சொக்கிப் போனது தமிழகம்.

அடுத்து, ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் ‘குயில் பாட்டு’ பாடலைக் கேட்டு, வானில் பறந்த குயில்கள் கூட, கோடம்பாக்கம் வந்து ‘யாரு பாடுறது? என்ன குரல்ப்பா இது’ என்று எட்டிப்பார்த்துவிட்டுப் போயின.

அதன் பிறகு ஸ்வர்ணலதாவுக்கு ஏறுமுகம்தான். ‘சின்னதம்பி’ படத்தில், ‘போவாமா ஊர்கோலம்’ பாடல் இன்றைக்குக் கேட்டாலும் என்னவோ செய்யும். நம்மையும் ஊர்வலத்துடன் இரண்டறக் கலக்கச் செய்யும். இதுவும் மாஸ் ஹிட்டடித்த பாடலானது.

பிறகென்ன?

ஸ்வர்ணலதாவுக்கு ஹிட்டாகும் பாடலாகவே கிடைக்குதே என்று ஒரு சிலரும், ஸ்வர்ணலதா பாடினால், அந்தப் பாட்டு நிச்சயம் ஹிட் என்று பலரும் பேசத் தொடங்கினார்கள். படத்துக்கு ஒரு பாடலாவது ஸ்வர்ணலதா பாடிவிடுவார். மாதத்துக்கு ரெண்டு பாட்டாவது மெகா ஹிட்டாகிவிடும். உச்சஸ்தாயியில் இவர் குரல் போகும் போதெல்லாம் கலங்கடித்துவிடுவார். ‘அலைபாயுதே’வில், ‘எவனோ ஒருவன்’ பாடலலைக் கேட்கும் போது,  அலைகளென கண்ணீர் வழிந்துகொண்டிருக்கும்.

பி.சுசீலா, எஸ்.ஜானகி, சித்ராவுக்கு என ரசிகர்கூட்டம் இருப்பது போல், ஸ்வர்ணலதாவுக்கு ஒரு ரசிகர்கூட்டம் சேர்ந்தது. எப்படி, சுசீலாவின் குரலையும் ஜானகியின் பாடலையும் சித்ராவின் ஸ்டைலையும் ஒருசேர ரசித்தார்களோ... அதேபோல், ஸ்வர்ணலதாவின் குரலையும் பிரமித்து ரசித்தார்கள்.

‘ராக்கம்மா கையைத் தட்டு’ என்ற பாடலைப் பாடாதவர்களே இல்லை. ‘நான் ஏரிக்கரை மேலிருந்து’ பாடலையும் ‘மலைக்கோயில் வாசலில்’ பாடலையும் கேட்டுச் சொக்கித்தான் போனார்கள் ரசிகர்கள். ’வள்ளி’ படத்தின் ‘என்னுள்ளே...’ பாடல், நம்முள்ளே என்னென்ன மாயங்களோ செய்யும் ஜாலக் குழைசலில் கரைந்தேவிடுவோம்.

பாடப்பாட, ரசிகர்கள் சேர்ந்தார்கள். பாடப்பாட, விருதுகளும் சேர்ந்தன. ‘கருத்தம்மா’வின் ‘போறாளே பொன்னுத்தாயி’ பாடலுக்கு மாநில, தேசிய விருதுகள், வீட்டு காலிங்பெல்லை அழுத்தின.

‘இந்தியன்’ படத்தின் ‘மாயா மச்சீந்திரா’ பாடலில் அப்படியொரு மாயத்தை, தன் குரலில் செய்து அசத்தியிருப்பார். இந்தப் பாடல் மற்ற பாடல்களைவிட தனித்துவத்துடன் திகழ, ஸ்வர்ணலதாவின் குரலும் குழைவுமே காரணம் என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’ பாடலில், குரலால் விளையாடியிருப்பார் சுவர்ணலதா.

ஒரு படத்தில், நான்கைந்து பாடகிகள் பாடியிருந்தாலும் இவரின் பாடல் தனியே தெரியும். அதுதான் ஸ்வர்ணலதாவுக்கு, அவரின் குரலுக்கு கடவுள் தந்த பரிசு என்றே சொல்லி குதூகலித்தது திரையுலகம்.

’சத்ரியன்’ படத்தில் இவர் பாடிய பாடல்தான், ஸ்வர்ணலதாவின் பாடல்களிலேயே மாஸ்டர்பீஸ் என்று இன்றைக்கும் கிறங்கிக் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.

இப்படியாக, குறைவான காலகட்டத்திலேயே 5 ஆயிரம் பாடல்கள் வரை பாடினார் ஸ்வர்ணலதா. ஆனால் குறைந்த காலத்திலேயே காலன், காலநேரமெல்லாம் பார்க்காமல் அழைத்துச் சென்றுவிட்டான். மக்களின் செவிகளுக்கும் மனங்களுக்கும் மாபெரும் துரோகத்தைச் செய்துவிட்டான்.

ஸ்வர்ணலதா எனும் குரலரசியை, அவ்வளவு சீக்கிரத்தில் நாம் இழந்திருக்கவேண்டியதில்லை.

இதோ... 1973ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி பிறந்தார் ஸ்வர்ணலதா. இன்று ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள். அவர் மறைந்தாலென்ன... அவரின் பாடல்களுக்கான ஆயுள்... இந்த பிரபஞ்ச ஆயுளிருக்கும் வரை இருக்கும்.

ஸ்வர்ணலதாவை இந்தநாளில் நினைவுகூர்வோம். அவரின் பாடல்களில் மிகவும் மனம் கவர்ந்த உங்களின் பாடல்களைப் பட்டியலிடுங்கள்.

காற்றிருக்கும் திசையெல்லாம் ஸ்வர்ணலதாவின் சிங்காரக் குரல் மிதக்கட்டும்; கலக்கட்டும்!

முக்கிய செய்திகள்

மேலும்