மனஸ்தாபங்கள் தீர்ந்தது: மீண்டும் இணைந்த தனுஷ் - ஜி.வி.பிரகாஷ்

By ஸ்கிரீனன்

மனஸ்தாபங்கள் தீர்ந்து, 'ஜெயில்' படத்தில் மீண்டும் இணைந்துள்ளது தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி.

வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது நாயகனாக வசந்தபாலன் இயக்கத்தில் நடித்துள்ளார்.

'ஜெயில்' என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு.

இப்படத்துக்கான பாடல்களை இறுதிச் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இதில் ஒரு பாடலுக்காக நாயகி அதிதிராவை பாட வைத்தார். இவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'காற்று வெளியிடை' மற்றும் 'செக்கச்சிவந்த வானம்' படத்தில் நடித்தவர்.

தற்போது, மற்றொரு பாடலுக்காக தனுஷை பாட வைத்துள்ளார். தனுஷ் நடித்த 'ஆடுகளம்', 'மயக்கம் என்ன' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் ஜி.வி.பிரகாஷ். 'மயக்கம் என்ன' படத்தின் போது ஏற்பட்ட மனஸ்தாபத்தில் இருவருமே நீண்ட நாட்களாக பேசாமல் இருந்தனர்.

'ஜெயில்' படத்தின் ஒரு பாடலுக்காக இருவரையும் இணைத்து வைத்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடலொன்றை பாடி முடித்துள்ளார் தனுஷ். இயக்குநர் வசந்தபாலன், தனுஷ், ஜி.வி.பிரகாஷ் இணைந்திருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இதனை அறிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

இப்புகைப்படத்தை பலரும் பகிர்ந்து, மீண்டும் இணைந்துள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால், விரைவில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பார் என தெரிகிறது.

'ஜெயில்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் ராதிகா, ‘பசங்க’ பாண்டி, ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ அபர்ணதி, ஜெனிஃபர், மணிமேகலை, 'பாகுபலி' வில்லன் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்துக்குக் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.ராமகிருஷ்ணனும், பாக்கியம் சங்கரும் வசனம் எழுதியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE