ரஜினி, கடவுளின் மனித வடிவம்: சுதன்ஷு பாண்டே

ரஜினிகாந்தை சந்தித்தது வாழ்க்கையின் மீதான தனது பார்வையையே மாற்றிவிட்டது என்கிறார் நடிகர் சுதான்ஷு பாண்டே.

‘எந்திரன்’ படத்தில் பேராசிரியர் போரா, ரெட் சிப் சிட்டியால் கொல்லப்படுவார். ‘2.0’ படத்தில், போரா மகன் கதாபாத்திரத்தில் சுதன்ஷு பாண்டே நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே ‘பில்லா 2’, ‘மீகாமன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

“இது வித்தியாசமான படம். இதுவரை இந்திய சினிமாவில் நாம் பார்க்காத ஒன்று. படத்தைப் பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன். போராவின் மகன் கதாபாத்திரம் இந்தப் படத்தில் இருக்க ஒரு காரணம் இருக்கிறது. படத்தின் கருவுக்கு, என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. கண்டிப்பாக ரசிகர்களிடம் ஒரு தாக்கத்தை என் கதாபாத்திரம் ஏற்படுத்தும்” என்கிறார் சுதன்ஷு.

‘2.0’ படம் என்பதைவிட, தனக்கு ஒரு ஆன்மிகப் பயணம் போன்றது என்கிறார் சுதன்ஷு. சிவ பக்தரான இவர், ரஜினியிடம் ஆன்மிகம் குறித்து நிறைய பேசியிருக்கிறார். ரஜினிகாந்த், கடவுளின் மனித வடிவம் என்பதில் உறுதியாக இருக்கிறார் சுதன்ஷு.

“ரஜினி சாதித்திருப்பதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. நான் காலைத் தொட்டு வணங்கி ஆசி வாங்கிக்கொண்ட முதல் நடிகர் அவர்தான். அவருடன் வேலை செய்தது, பல விஷயங்கள் குறித்த எனது பார்வையை மாற்றியமைத்தது.

என்னிடம், லிவிங் வித் தி ஹிமாலாயன் மாஸ்டர்ஸ் புத்தகத்தைக் கொடுத்தார். ‘சுதன்ஷு, இது என் வாழ்க்கையை மாற்றியது. நீங்களும் இதைப் படிக்க வேண்டும்’ என்று சொன்னார். அவர் இந்தப் புத்தகத்தை எனக்குத் தந்தது எனது வாழ்வின் மிகச்சிறந்த தருணம்” என்று நெகிழ்கிறார் சுதன்ஷு பாண்டே.

- ஸ்ரீவத்சன், தி இந்து ஆங்கிலம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE