சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தினை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதன் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களே பாக்கி இருக்கிறது. இதன் பணிகளை முடித்துவிட்டு, ரஜினி படத்தினை இயக்கவுள்ளார் சுந்தர்.சி என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இதனிடையே, திடீரென்று விஷால் தரப்பில் இருந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவிருப்பதை அறிவித்திருக்கிறார்கள். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில் ‘ஆம்பள’, ‘ஆக்ஷன்’ மற்றும் ‘மதகஜராஜா’ ஆகிய படங்களின் காட்சிகளைக் கொண்டு உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த வீடியோ இணையத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கி இருக்கிறது. விஷால் படத்தினை சுந்தர்.சி இயக்கவுள்ளார் என்றால், ரஜினி படத்தினை இயக்கப் போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விஷால், தமன்னா உள்ளிட்ட சிலரை வைத்து ப்ரோமோ வீடியோ ஒன்றை படமாக்கி வைத்துள்ளார் சுந்தர்.சி. அந்த வீடியோ பதிவு ரஜினி படத்தினை முடித்துவிட்டு வெளியிட்டு விஷால் படத்தைத் தொடங்குவார் என நினைத்தார்கள்.
ஆனால், இப்போது சுந்தர்.சி தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை எதுவுமே உண்மையில்லை என்ற சூழல் உருவாகி இருக்கிறது.