‘The Road’ Review: பாதை மாறிய நெடும் பயணம்!

By கலிலுல்லா

மகனின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கன்னியாகுமரி வரையிலான ‘ரோட் ட்ரீப்’ ஒன்றுக்கு திட்டமிடுகின்றனர் மீரா (த்ரிஷா) குடும்பத்தினர். இதில் மீரா கர்ப்பமாக இருப்பதால் அவர் அந்தப் பயணத்தை தவிர்க்க, மகனும் கணவரும் செல்லும் கார் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு நேர்கிறது. இழப்பை தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருக்கும் மீரா, ஏற்கெனவே அந்தக் குறிப்பிட்ட நெடுஞ்சாலையில் பலர் இவ்வாறு மரணித்திருப்பதை அறிந்து விசாரணையில் இறங்குகிறார். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன.

இதற்கு மறுபுறம் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் மாயா (‘டான்சிங் ரோஸ்’ ஷபீர்) மாணவி ஒருவரின் பொய்க் குற்றச்சாட்டால் கல்லூரியில் இருந்து நீக்கப்படுகிறார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மாயாவுக்கு வேறு கல்லூரியில் வேலை கிடைக்காததால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்க, இழப்பு ஒன்றையும் சந்திக்கிறார். வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் இந்த இரண்டு கதைகளும் சந்திக்கும் புள்ளியே ‘The Road’ (தி ரோட்) படத்தின் திரைக்கதை.

அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் கதைக்குள் செல்லவே நீ......ண்டநேரத்தை எடுத்துகொள்கிறது. போய் சேர வேண்டிய ரூட்டுக்கான மேப்பை தொலைத்துவிட்டது போல சுற்றிக்கொண்டிருக்கும் கதையில் சூடுபிடிக்க தொடங்கும்போது சம்பந்தேமில்லாத மற்றொரு கதை கிளைக்கதை பிரிகிறது. வழிதவறி வந்த பயணியைப்போல பார்வையாளர்கள் முழித்துகொண்டிருக்க, மீண்டும் த்ரில்லர் கதைக்குள் நுழைகிறது படம். இப்படியாக மாறி மாறி பயணிக்கும் கதைகளில் எதனுடனும் ஒன்ற முடிவதில்லை. படத்தின் மிகப் பெரிய பிரச்சினை செயற்கையான சூழலை உருவாக்கி அதன் மூலம் கதை சொல்வது.

குறிப்பாக, ஷபீர் கதையில் வரும் மாணவியின் காதல், அதற்காக அவர் எடுக்கும் முடிவுகள், பின் அந்த காதலை மறந்து காணாமல் போவது, விசாரிக்காமல் எடுக்கப்படும் நடவடிக்கைகள், ஒட்டாத சென்டிமென்ட் என மொத்த கதையிலும் செயற்கை தன்மை இழையோடுகிறது. பெண்ணை மையப்படுத்திய கதையில் மாணவியின் பொய் பாலியல் குற்றச்சாட்டால் ஒருவரின் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் ஆக்க முடியும் என காட்டியிருப்பது, மற்றொரு பெண்ணை வில்லத்தனத்தில் இறக்கிவிட்டிருப்பது நெருடல்.

த்ரில்லர் கதையில் அடுத்தடுத்த சம்பவங்கள் மறைத்து வைத்திருப்பதே சுவாரஸ்யம். ஆனால், இப்படத்தில் அப்படியான காட்சிகளை எளிதாக கணித்து விட முடிவது பெரும் பலவீனம். ஒரு கட்டத்தில் த்ரிஷா காணாமல் போய்விடுகிறார். அவரை வேறு தேடவேண்டியிருக்கிறது. படம் த்ரில்லருக்குள் நுழையும்போது, ஏகப்பட்ட லாஜிக் பிரச்சினைகள். கான்ஸ்டபிளாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட யார் தலையீடு இல்லாமல் நினைத்த நேரத்தில் தடவியல் துறையினரை வரவழைக்கிறார், த்ரிஷாவின் ஒரே அறையில் உண்மையை ஒப்புக்கொள்ளும் குற்றவாளி, கடைசி வரை காவல் துறைக்கு சொல்லாமல் தனியாளாக எல்லாவற்றையும் கண்டறியும் த்ரிஷா, எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் தனியாக சென்று அவரை கொல்லும் காட்சிகள் உண்மையில் இது ஃபேன்டஸி உலகில் நடக்கும் கதையா என தோன்றாமல் இல்லை.

படத்தின் நடுவில் ‘என் பொறுமைய சோதிக்காத... எனக்கு பொறுமையே கிடையாது’ என்கிறார் த்ரிஷா. பார்வையாளர்களின் பொறுமையை மட்டும் சோதிக்கலாமா? நெடுஞ்சாலையில் நடந்த கொலைகள் குறித்தும் அதற்கான காரணங்களை சொல்லும் இடங்களும் கவனம் பெறுகின்றன.

த்ரிஷா ஒரே ஆளாக இந்தக் கதையை தாங்கி சோர்வடையக் கூடாது என்பதற்காக ஷபீர் மற்றொரு தோள் கொடுத்திருக்கிறார். குடும்பத்தை இழந்து தவிப்பது, மகனின் வீடியோவைக் கண்டு உடைந்து அழுவது, எதற்கும் பயப்படாத உடல்மொழி என த்ரிஷா தனது வழக்கமான நடிப்பில் ஈர்க்கிறார். கட்டுக்கோப்பான உடல் அமைப்பில் கல்லூரி பேராசிரியராக கவனம் பெறும் ஷபீர் அனைத்தையும் இழந்து குறுகி விரக்தியில் கண்ணீர் சிந்தும் இடங்களில் நடிப்பில் தனக்கான இடத்தை உறுதி செய்கிறார். சந்தோஷ் பிரதாப் ஓரிரு காட்சிகளில் வந்து செல்கிறார். வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மியா ஜார்ஜ் கதைக்கு தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர்.

‘இசை அரக்கன்’ என்ற டைட்டிலுடன் சாம் சி.எஸ் பெயர் தோன்றுகிறது. அதற்கேற்ப பின்னணியை இசையில் அடித்து தீட்டியிருக்கிறார். பாடல்களில் ஈர்ப்பில்லை. இரவில் நெடுஞ்சாலைக் காட்சிகளில் தேவையான பயத்தை விதைக்கிறது வெங்கடேஷின் கேமரா. சிவராஜ் கட்ஸில் இன்னும் கவனம் செலுத்தி கச்சிதம் கூட்டியிருக்கலாமோ என தோன்றுகிறது. காரணம் இரண்டாம் பாதியின் நீளம்.

வாழ்வில் பணம் எத்தனை முக்கியமானது என்பதை மையப்படுத்திய கதை பாதை வழி தெரியாமல் மாறி சென்றதால் திரைக்கதையில் பெரும் விபத்து நேர்ந்திருக்கிறது. “எங்கையோ பொறந்து எங்கேயோ வளர்ந்து இங்க வந்து உசுற விடறாங்க” என்ற படத்தின் வசனம் குறியீடாக எதையோ உணர்த்துகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்