தென்னிந்திய சினிமா

இந்திய சினிமாவின் மாஸ்டர் பீஸ் ‘காந்தாரா’ - ரஜினிகாந்த் புகழாரம்

செய்திப்பிரிவு

'காந்தாரா' திரைப்படம் இந்திய சினிமாவின் மாஸ்டர் பீஸ் என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

'கே ஜி எஃப்' திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் 'காந்தாரா'. தொடக்கத்தில் கன்னட மொழியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு காரணமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டது.

செப்டம்பர் 30-ம் தேதி வெளியான இப்படம் ஸ்லோ பிக்அப் முறையில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் பிரபலாக தொடங்கியது. தற்போது படம் நல்ல வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கும் நிலையில், பிரபலங்கள் பலரும் படத்தை புகழ்ந்து வருகின்றனர். மறுபுறம் படத்திற்கு எதிரான விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படத்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தெரிந்ததை விட தெரியாதது தான் அதிகம் என்பதை சினிமாவில் 'காந்தாரா' படத்தை விட யாரும் தெளிவாக சொல்லியிருக்க முடியாது. கூஸ்பம்ப் தருணத்தை கொடுத்துள்ளீர்கள் ரிஷப் ஷெட்டி. எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகராக உங்களுக்கு வாழ்த்துகள் ரிஷப். இந்திய சினிமாவில் இந்த தலைசிறந்த படைப்பின் ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், குழுவினருக்கும் வாழ்த்துக்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் ரிஷப் ஷெட்டி, ''நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். சிறுவயதில் இருந்தே நான் உங்கள் ரசிகன். உங்கள் பாராட்டு மூலம் என் கனவு நனவாகியிருக்கிறது. உள்ளூர் கதைகளை படமாக்க உங்களுடைய இந்த வாழ்த்து என்னை மேலும் தூண்டியிருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT