சென்னை: ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் வெளியீட்டு தேதியினை படக்குழு முடிவு செய்திருக்கிறது. படம் டிசம்பர் 20-ல் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்து வரும் இந்தப் படம் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் இருக்கிறது. இதன் ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன், எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதுவரை ‘ஜருகண்டி’ என்ற பாடல் மட்டுமே வெளியாகி இருக்கிறது. மேலும், வெளியீட்டு தேதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இவ்வளவு பெரிய பொருட்செலவு கொண்ட படத்தினை இப்படி செய்யலாமா என்று பலரும் ஆச்சரியப்பட்டு வந்தார்கள். ரசிகர்களும் படக்குழுவினருக்கு எதிராக இணையத்தில் வசைபாடினார்கள். அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டிசம்பர் 20-ம் தேதி படம் வெளியாகும் என்று இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.
இதனை தயாரிப்பு நிறுவனமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், அடுத்த வாரம் முதல், படம் குறித்த தகவல்கள் வெளியாகும் எனவும் தமன் உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கிராபிக்ஸ் பணிகளை அமெரிக்காவில் மேற்பார்வையிட்டு வருகிறார் ஷங்கர். விரைவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்க உள்ளது படக்குழு.