தென்னிந்திய சினிமா

10 கோடி பார்வைகளைக் கடந்த ‘சலார்’ டீசர் | நன்றியில் திளைத்திருக்கிறோம்: படக்குழு

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ‘சலார்’ டீசர் 10 கோடி பார்வைகளை பெற்றதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், செப். 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது.

கடந்த ஜூலை 6 அதிகாலை 5 மணியளவில் ‘சலார்’ டீசரை படக்குழு வெளியிட்டது. வெளியான 24 மணி நேரத்தில், இந்த டீசர் 8 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. தற்போது இது 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ’சலார்’ படக்குழு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நன்றியில் திளைத்திருக்கிறோம். இந்திய சினிமாவின் ஹீரோயிச பிம்பத்துக்கு அடையாளமாக திகழும் ’சலார்’ புரட்சியில் ஒன்றிணைந்த உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் கிடைத்த அன்பு மற்றும் ஆதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உங்களின் அசைக்க முடியாத ஆதரவு எங்கள் ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT