மார்வெல் படங்கள் தியேட்டர்களை தீம் பார்க் கேளிக்கை பூங்காக்களாக மாற்றும்: மார்வெல் படங்களின் ஹீரோவுக்கு ஸ்கோர்செஸி பதில்

லாஸ் ஏஞ்சல்ஸ்,

மார்வெல் படங்களில் சூப்பர் ஹீரோ கதாபத்திரத்தில் நடித்து வரும் டவுனிக்கு பதில் அளிக்கும் விதமாக, ''மார்வெல் படங்கள் தியேட்டர்களை தீம் பார்க் கேளிக்கை பூங்காக்களாக மாற்றும்'' என்று ஸ்கோர்செஸி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு புகழ்பெற்ற இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி, ''மார்வெல் படங்கள் சினிமா அல்ல; அவை சாகசங்கள் நிறைந்த ஒரு தீம் பார்க் அனுபவத்தையே தருகின்றன'' என்று கூறியதற்கு ஹாலிவுட்டில் எதிர்ப்பு உருவானது. பிரபல மார்வெல் பட இயக்குநர்கள் ஜாஸ் வெட்டோன், ஜேம்ஸ் கன், பீட்டர் ராம்சே மற்றும் நடிகர் சாமுவேல் எல் ஜாக்சன் ஆகியோரும் ஸ்கோர்செஸியின் கருத்துகளுக்குப் பதிலளித்திருந்தனர்.

மார்வெல் படங்களின் சூப்பர் ஹீரோ நடிகரான ராபர்ட் டவுனி ஜூனியர், ''மார்வெல் படங்கள் சினிமா அல்ல என்கிறீர்கள்; ஆனால் திரையரங்குகளில்தானே ஓடுகிறது. மேலும் ஸ்கோர்செஸி தனது இத்தகைய கருத்துகள் மூலம் அரக்கத்தனமாக வந்து இதுபோன்ற முயற்சிகளை ஒழித்துக்கட்டுகிறார்'' என்று பதில் அளித்தார்.

என்றாலும் இந்த விவாதம் முடிவுக்கு வருவதுபோல் தெரியவில்லை. மூத்த இயக்குநரும் ஆஸ்கர் விருதுபெற்றவருமான மார்ட்டின் ஸ்கோர்செஸி மீண்டும் இந்த விவகாரத்தை வளர்த்தெடுத்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று லண்டன் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி லண்டன் வந்திருந்தார். லண்டன் திரைப்பட விழா அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது. அவரது புதிய திரைப்படமான 'ஐரீஷ்மேன்' திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

'ஐரீஷ்மேன்' திரையிடல் தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்கோர்செஸி கூறியதாவது:

"தியேட்டர்கள் கேளிக்கை பூங்காக்களாக மாறியுள்ளன. மார்வெல் வகை படங்கள் தியேட்டர்களை கேளிக்கை பூங்காக்களாகவே மாற்றும். இது ஒரு வித்தியாசமான அனுபவம்.

தியேட்டர் உரிமையாளர்கள் தங்கள் விளையாட்டை மேம்படுத்த வேண்டும். அத்தகைய படங்கள் தியேட்டரைப் படையெடுக்க அனுமதிக்கக் கூடாது. தியேட்டர்கள் கதையம்சமுள்ள படங்களுக்கானது என்று நாங்கள் நம்புகிறோம்.

மார்வெல் படங்கள் சினிமா அல்ல, அது வேறு. நாம் அதை ஆக்கிரமிக்க விடக்கூடாது, எனவே அது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. மேலும் கதைப் படங்களாக (narrative films) இருக்கும் படங்களையே காண்பிக்க தியேட்டர்களை அனுமதிக்க அதன் உரிமையாளர்கள் சற்று மேம்பட வேண்டும்".

இவ்வாறு மார்ட்டின் ஸ்கோர்செஸி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE