திரை விமர்சனம் - Shazam!

By செய்திப்பிரிவு

தனக்கு வயதாகிவிட்டதால் தன்னிடமுள்ள அளப்பரிய சக்தியை இன்னொரு மனிதரிடமும் ஒப்படைப்பதற்காகக் காத்திருக்கிறார் ஒரு மந்திரவாதி. அதற்கான தகுதி யாருக்கு இருக்கிறது என்ற நீண்டகாலத் தேடலில் தொடர்ந்து தோல்வியடைகிறார்.

அவ்வாறு தேடும்போது மந்திரவாதியால் நல்ல குணங்கள் இல்லை என்று ஒதுக்கப்படும் சிறுவன், 20 வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்து மந்திரவாதியிடமிருந்து அவரது சக்தியை அபரிகரிக்க முயல்கிறான். அதற்கு மாறாக ‘7 Deadful Sins' என்னும் தீய சக்திகள் அவனை அடைகின்றன.

சிறுவயதிலேயே தாயிடமிருந்து தொலைந்து போகும் பில்லி என்ற சிறுவனுக்கு தனது சக்தியைப் பெறுவதற்கு உண்டான தகுதி இருப்பதைத் தெரிந்துகொள்ளும் அந்த மந்திரவாதி தனது சக்தியை அந்தச் சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு இறக்கிறார். வீட்டுக்கு வரும் பில்லி தனது சகோதரனிடம் விஷயத்தைக் கூறுகிறான். ’ஷசாம்’ என்று கூறினால் சூப்பர் ஹீரோவாகவும் மீண்டும் ’ஷசாம்’ என்று கூறினால் சிறுவனாகவும் மாறுகிறான்.

இன்னொரு பக்கம் ’ஷசாம்’ சக்தியை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று வில்லன் பில்லியைத் தேடுகிறார். ஒருவழியாக  கண்டுபிடிக்கும் வில்லன் பில்லியிடமிருந்து சக்திகளை அபரிக்கும் முயற்சியில் தோல்வியடைகிறார். பின்னர் பில்லியின் சகோதரனைப் பிடிக்கும் வில்லன் அவன் மூலம் பில்லியை வரவைக்கிறான். வில்லனிடமிருந்து சகோதரனை பில்லி எவ்வாறு மீட்கிறான், சக்திகளை வில்லனிம் இழந்தானா என்பதே ‘ஷசாம்’ படத்தின் கதை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ’டிசி’ காமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு கலர்ஃபுல்லான ஜாலியான ஒரு படம். டிசி தனது வழக்கமான இருட்டுப் பின்னணியிலிருந்து வெளியே வந்து ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறது.

படம் தொடங்கியது முதல் எந்தத் தொய்வும் இல்லாமல் திரைக்கதையும், படம் முழுக்க விரவிக் கிடக்கும் நகைச்சுவை வசனங்களும் படத்துக்குப் பலம். ஷசாமாக நடித்திருக்கும் Zachary Levi சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். தனக்குக் கிடைத்திருப்பது என்று தெரியாமலே அதைப் பயன்படுத்தும் விதம் ரகளை. சிறுவன் பில்லியாக நடித்திருக்கும் ஏஷெர் ஏங்கெலும் சிறப்பாக நடித்துள்ளார். தொலைந்து போன தாயை கண்டுபிடிக்கும் காட்சி உதாரணம்.

க்ளைமாக்ஸின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். படத்தின் முடிவில் ’டிசி’ ரசிகர்களுக்கு ஒரு ஆச்சர்யம் இருக்கிறது.

படம் முடிந்த பிறகு இரண்டு போஸ்ட் கிரெடிட் காட்சிகள் உண்டு. இரண்டும் படத்துக்குத் தேவையில்லாத ஆணிகள்தான்.

டிசி நிறுவனம் தனது வழக்கமான டெம்ப்ளேட்டிலிருந்து வெளியே வந்து மார்வெல் பாணியில் எடுத்துள்ள இந்தப் படம் டிசி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து ஹாலிவுட் ரசிகர்களையும் திருப்திபடுத்தும்.

முக்கிய செய்திகள்

மேலும்