Godzilla x Kong: The New Empire - திரை விமர்சனம்: இந்திய மசாலா தடவிய ஹாலிவுட் ஆக்‌ஷன் விருந்து!

By சல்மான்

டிசி, மார்வெல் காமிக்ஸ் ரசிகர்களை போலவே மான்ஸ்டர்வெர்ஸ் படங்களுக்கு என்று வெறித்தனமான ரசிகர் கூட்டம் உலகெங்கும் உண்டு. இதற்கு முன் வெளியான ‘காங்: ஸ்கல் ஐலேண்ட்’, ‘காட்ஸில்லா (2014)’, ‘காட்ஸில்லா 2’, ‘காட்ஸில்லா v காங்’ வரிசையில் தற்போது அடுத்த படமாக வெளியாகியுள்ளது, ‘காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பயர்’.

முந்தைய பாகத்தின் இறுதியில் மெக்காகாட்ஸில்லா என்ற எதிரியை வீழ்த்திய பிறகு ஹாலோ எர்த் பகுதியை காங்கும், பூமியின் மேற்பரப்பை காட்ஸில்லாவும் பிரித்துக் கொண்டதன் அடிப்படையில், ஆளுக்கு ஒரு பகுதியில் அவரவர் வேலையை அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். பூமிக்கு வரும் ஆபத்துகளைத் தடுத்துக் கொண்டும், ரோம் நகரில் உள்ள கொலோசியத்தின் நடுவே உறங்கிக் கொண்டும் காலத்தை கழிக்கிறது காட்ஸில்லா. இன்னொரு பக்கம், ஹாலோ எர்த் பகுதியில் வேட்டையாடிக் கொண்டு திரிகிறது காங்.

இந்த அமைதி ரொம்ப காலம் நீடிக்கவில்லை. ஹாலோ எர்த் பகுதியில் இருக்கும் மோனார்க் ஆய்வகம் எங்கிருந்தோ வரும் ஒரு விநோத சிக்னலை கண்டுபிடிக்கிறது. இதே சிக்னலை பூமியில் வாழும் ஐவி பழங்குடி இனத்தை கடைசி நபரான ஜியா என்ற சிறுமியும் உணர்கிறார்.

இந்த சிக்னலை உள்வாங்கும் காட்ஸில்லா வரப்போகும் ஆபத்துக்காக தன்னை தயார் செய்யும் நோக்கில் உறக்கத்திலிருந்து எழுகிறது. இந்த சிக்னலுக்கான காரணம் என்ன? எதிர்வரப்போகும் பேராபத்தை காட்ஸில்லாவும் காங்கும் எப்படி தடுக்கிறார்கள் என்பதே ‘காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பயர்’ படத்தின் மீதிக் கதை.

கரோனா தொற்று உலகம் முழுவதும் சினிமாத் துறையை முடக்கிப் போட்டிருந்த காலகட்டத்தில் மக்களை திரையரங்குகளுக்கு மீண்டும் வரவைத்த பெருமை இதற்கு முன்பு வெளியான ‘காட்ஸில்லா v காங்’ படத்தையே சாரும். பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்ட ‘காட்ஸில்லா’ மற்றும் ‘காங்’ என்ற இருபெரும் டைட்டன்களுக்கும் சரியான விகிதத்தில் ஸ்பேஸ் கொடுத்து உருவாக்கப்பட்ட அந்த படம் ஹாலிவுட்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர்களின் ஒன்றாக மாறியது. அந்த வெற்றிதான் தற்போது இந்த படம் உருவாக வழிவகுத்தது.

இந்த படத்தின் உண்மையான ஹீரோ காங் தான். படம் முழுக்க காங்-க்கான காட்சிகள் தான் அதிகம். காட்ஸில்லா படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கொலோசியத்தின் நடுவே ஒரு பூனைக் குட்டியைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது, அல்லது எதிர்வரும் ஆபத்துக்காக எனர்ஜியை சேகரித்துக் கொண்டிருக்கிறது.

முதல் பாதி முழுக்க, படம் எதை நோக்கிப் போகப் போகிறது என்று ஆடியன்ஸுக்கு புரியவைக்கவே பெரிய சிரத்தை எடுத்துக் கொள்கிறார் இயக்குநர் ஆடம் விங்கார்ட். இவை பெரும்பாலும் வசனங்களின் வழியே சொல்லப்படுவதால் பல இடங்களில் சலிப்பு மேலிடுகிறது. காங் மற்றும் காட்ஸில்லாவுக்கான விசிலடிக்கத் தூண்டும் இன்ட்ரோ காட்சி, குட்டி காங் சுகோ வரும் காட்சிகள், ப்ரையன் டைரீ ஹென்ரி பேசும் நகைச்சுவை வசனங்கள் மட்டுமே ஆறுதல்.

உண்மையில் இரண்டாம் பாதியில் தான் படமே தொடங்குகிறது. குறிப்பாக ஸ்கார் கிங்-ன் அறிமுகத்துக்குப் பிறகு. மான்ஸ்டர்வெர்ஸின் அடிநாதமான அட்டகாசமான ஆக்‌ஷன் காட்சிகள் இதில் சற்று தூக்கலாகவே உண்டு. குறிப்பாக எகிப்தில் பிரமிடுகளுக்கு நடுவே காங் மற்றும் காட்ஸில்லா மோதிக் கொள்ளும் காட்சி, கிளைமாக்ஸில் காட்ஸில்லாவின் முதுகில் காங் ஏறிக் கொண்டு வரும் காட்சி என மான்ஸ்டர்வெர்ஸ் ரசிகர்கள் துள்ளிக் குதிக்கும்படியான கூஸ்பம்ப்ஸ் காட்சிகள் இரண்டாம் பாதி முழுக்கவே நிறைந்துள்ளன.

படத்தின் பெரும் பிரச்சினையே அதன் எமோஷனல் காட்சிகள்தான். முந்தைய பாகத்தில் டைட்டன்களின் மோதலே பிரதானமாக இருந்தாலும் மனிதர்களின் கதாபாத்திரங்களும் அழுத்தமாக எழுதப்பட்டிருந்தது. அதுவே அப்படத்தின் வெற்றிக்கும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஆனால் இப்படத்தின் மனிதர்களின் கதாபாத்திர வடிவமைப்பு ஜீரோ. ஜியாவுக்கு அவரது வளர்ப்புத் தாயான இலீன் ஆண்ட்ரூஸ் (ரெபெக்கா ஹால்) இடையிலான காட்சிகள், ஜியாவுக்கும் அவரது பழங்குடி மக்களுக்கும் இடையிலான காட்சிகள் என எதுவும் ஒட்டவில்லை.

காங்-க்கு பல்லில் பிரச்சினையா? ரெடியாக ஒரு பிரம்மாண்ட பல் ரெடியாக இருக்கிறது. கையில் பிரச்சினையா? உடனே ஒரு பிரம்மாண்ட இயந்திர கை ரெடியாக இருக்கிறது. அதுவும் ஹாலோ எர்த் பகுதியில். முதல் பாதியின் திரைக்கதை தொய்வு காரணமாக இது போன்ற அபத்தங்கள் வெளிப்படையாகவே தெரிகின்றன.

’ஆர்ஆர்ஆர்’, ‘கேஜிஎஃப்’ போன்ற பான் இந்தியா படங்கள் ஹாலிவுட் இயக்குநர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது போலும். காட்ஸில்லாவும் காங்கும் சேர்ந்து ‘நாட்டு நாட்டு’ பாட்டு டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை. மற்றபடி இந்தியப் படங்களுக்கே சவால் விடும்படியான ஸ்லோ மோஷன் காட்சிகள், பில்டப் காட்சிகள் என படம் முழுக்க இந்திய மசாலாவின் நெடி.

இது போன்ற படங்களின் பிரதான நோக்கம் குழந்தைகளை கவர்வதாகத்தான் இருக்கும். அந்தவகையில் ‘காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பயர்’ தனது நோக்கத்தில் வெற்றிபெறுகிறது. லாஜிக், திரைக்கதை பற்றியெல்லாம் யோசிக்காமல் 2 மணி நேரம் ஜாலியாக ஒரு ஆக்‌ஷன் படத்தை பார்க்க நினைப்பவர்கள் தாராளமாக பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

ஓடிடி களம்

51 mins ago

இந்தியா

11 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்