கோவை: ஜவுளி உற்பத்தியில் பருத்திக்கு மாற்றாக செயற்கை நூல் இழை பயன்பாடு அதிகரித்துவருவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பருத்தியை முக்கிய மூலப்பொருளாக கொண்டு இயங்கும் இந்திய ஜவுளித் தொழில் அதன் விலை மற்றும் சந்தையில் நிலவும் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் நிலைமையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய தொழில்துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில், மறுபுறம் விலை குறைந்த ஆடைகளை தயாரிக்க சில்லரை விற்பனை நிறுவனங்கள் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அறிவுரை வழங்குவதாகவும் இதனால் பருத்திக்கு மாற்றாக செயற்கை நூல் இழை பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பின் (ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது: பருத்தி விலை அதிகரித்துள்ளதால் இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் பல்வேறு ஆடை ரகங்களை தயாரிக்க செயற்கை இழைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பண வீக்கத்தால் சில்லரை விற்பனை பாதிக்கப்படுகிறது.
இதனால் விலை குறைந்த பிராண்டட் ஆடைகளை தயாரிக்க ‘ரீடெய்ல்’ நிறுவனங்கள் ஜவுளி உற்பத்தியாளர்களை அறிவுறுத்தி வருகின்றன. விளையாட்டு துறையில் பயன்படுத்தப் படும் பல்வேறு ஆடைகள் தயாரிப்பிலும் ‘பாலியெஸ்டர் பிலெமென்ட்’ பயன்படுத்தப் படுகிறது. இந்த காரணங்களால் பருத்தி பயன்பாடு நூற்பாலைகளில் குறைந்து வருகிறது, என்றார்.
தென்னிந்திய நூற்பாலைகள் சங்க (சிஸ்பா) கவுரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன் கூறும்போது, “பருத்தி மூலம் தயாரிக்கப்படும் ஒரு பனியன் விலை ரூ.55 மட்டுமே. சந்தையில் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளம்பர கட்டணம் உள்ளிட்டவையே இதற்கு காரணம். பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழை மூலம் தயாரிக்கப்படும் போது தயாரிப்பு விலை ரூ.45-ஆகவும் விற்பனை விலை ரூ.240-ஆக இருக்கும்.
பத்து ரூபாய் மட்டுமே வித்தியாசம் இருக்கும். இந்தியாவின் அடையாளம் பருத்தி. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் செயற்கை நூல் இழை இறக்குமதி செய்து விநியோகிக்கின்றன. அவர்கள் லாபம் பெறுவதற்காக ‘ரீடெய்ல்’ நிறுவனங்களை குறைந்த விலை ஆடைகளை தயாரிக்க அறிவுறுத்துகின்றன. இது பருத்தி ஜவுளித் தொழிலின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லதல்ல” என்றார்.