சென்னையில் ஜன. 2024-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழ்நாடு பட்ஜெட் 2023-ல் தொழில் துறை சார்ந்த அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் சென்னையில் நடத்தப்படவுள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம்பெற்ற அம்சங்கள்: தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொழில்துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது. 2021-ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 3,89,651 பேர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. இவற்றின் மூலம், ரூ.2,70,020 கோடி மதிப்பிலான முதலீடுகள் பெறப்படும்.

இந்த முதலீடுகளின் பலன்களை ஒருங்கிணைத்து, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணிக்க, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 நாட்களில் சென்னையில் நடத்தப்படவுள்ளது.

தொழில்கள் செழிக்கும் தமிழ்நாட்டின் தனிச் சிறப்புகளையும், முதலீட்டை ஈர்ப்பதற்கு உகந்த சூழலையும் எடுத்துக்காட்டும் தளமாக இம்மாநாடு அமையும். மேலும், மாநிலத்தில் உள்ள பெருந்தொழில்கள், சிறு தொழில் நிறுவனங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றை முதலீட்டாளர்களுடனும் உலகச் சந்தையுடனும் இணைக்க ஒரு வாய்ப்பாகவும் இது அமையும். இதற்கென, வரவு-செலவுத் திட்டத்தில் ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சியை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்க வேண்டும் என்பது இந்த அரசின் குறிக்கோளாகும். அண்மையில் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 85 தொழில் திட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களின் மூலம் 1,44,028 கோடி ரூபாய் முதலீட்டில் 2,14,478 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து திட்டமிட்ட தொழில் வளர்ச்சியை எய்த, துறை சார்ந்த புதிய பத்து கொள்கைகளை வெளியிட்டுள்ளது. (i) நிதிநுட்பக் கொள்கை, (ii) ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கொள்கை, (iii) உயிரியல் கொள்கை, (iv) ஏற்றுமதிக் கொள்கை, (v) வான்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை, (vi) காலணி மற்றும் தோல் கொள்கை, (vii) மின்சார வாகனங்கள் கொள்கை, (viii) தளவாடக் கொள்கை, (ix) நகர எரிவாயு வழங்கல் கொள்கை, (x) எத்தனால் கொள்கை

தமிழ்நாடு, குறிப்பாக சென்னை-திருப்பெரும்புதூர் தடம், வாகன உற்பத்தியில் நாட்டிலேயே முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது. வழக்கமான புதைபடிம எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக, தற்போது பிரபலமாகி வரும் பசுமை மின் வாகனங்கள் உற்பத்தியிலும், தமிழ்நாடு முதன்மை இடத்தை வகித்து வருகிறது. கடந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின்வாகனங்களில் 46 சதவீத வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை. உலகிலேயே மிகப்பெரிய இரு சக்கர மின்வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் நிறுவப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட மின்வாகனக் கொள்கை தமிழ்நாடு தொடர்ந்து அனைத்து வகை வாகன உற்பத்தியிலும் முன்னணி மாநிலமாக திகழும் என்பதை உறுதி செய்யும்.

தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்த அரசு முனைப்பாக உள்ளது. பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தோல் அல்லாத காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது. இத்தொழிற்சாலைகள் ஏற்கனவே செய்யாறு, பர்கூர் ஆகிய இடங்களில் செயல்பாட்டில் உள்ளன.

திண்டிவனத்தில் 5,400 பெண்களுக்கும், பெரம்பலூரில் 31,600 பெண்களுக்கும் வேலைவாய்ப்புகள் தரக்கூடிய இரண்டு தொழிற்சாலைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும், இரண்டு புதிய தொழிற்சாலைகள் ராணிப்பேட்டையிலும், கள்ளக்குறிச்சியிலும் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 32,000 பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி துறையில், மேலும் முதலீடுகளை ஊக்குவிக்க இதற்கென தனிக்கொள்கை வெளியிட்டுள்ளதுடன், தைவான் காலணி உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் ‘தமிழ்நாடு வழிகாட்டி’ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் கையொப்பமிட்டுள்ளது.

மாநிலத்தில் எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்க எத்தனால் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. உழவர்களின் வருவாயை உயர்த்துவதுடன், சர்க்கரை ஆலைகளின் நிதிநிலையை மேம்படுத்துவது இக்கொள்கையின் நோக்கங்களாகும். எத்தனால் உற்பத்திக்காக 5,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க இக்கொள்கை வழிவகுக்கும்.

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் ரூ.410 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால், ஏறத்தாழ 22,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் 1,500 பணியாளர்கள் தங்கும் வசதிகளுடன் தொழிலாளர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும். வரும் நிதி ஆண்டில், தொழில் துறைக்கு 3,268 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

விளையாட்டு

45 mins ago

தமிழகம்

14 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்