தமிழகத்தில் 18 மாதங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகம்: ஐஓசி திட்டம்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை; ‘‘தமிழகத்தில் இன்னும் 18 மாதங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் திட்டம் தொடங்கப்படும்’’ என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் செயல் இயக்குனர் வி.சி.அசோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தமிழகம் முழுவதும் குழாய் வழித்தடம் மூலம் எரிவாயு எடுத்துச் செல்வதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வழியாக குழாய் வழித்தடம் அமைத்து வருகிறது. இன்னும் 18 மாதங்களில் இப்பணி முடிந்து வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

உலக நாடுகளில் போர் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் நிலைத்தன்மை இல்லை. இந்தியாவின் மீதும் இந்த பாதிப்பு இருந்து வருகிறது. பொதுமக்களுக்கு எரிசக்தியை வழங்குவதிலும், துாய்மையான, பசுமையான சுற்றுச் சூழலை பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு பொறுப்புகள் அதிகம். 2046-ஆம் ஆண்டிற்குள் புகையில்லா நிலையை எட்டும் இலக்கை நிர்ணயித்துள்ளது.

2070-ஆம் ஆண்டிற்குள் மாசில்லா ஆற்றலை அடைய வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு இந்திய ஆயில் காப்பரேஷன் தேவையான நடவடிக்கைகளையும் திட்டங்களையும் மேற்கொண்டுள்ளது. அதனால், இந்தியன் ஆயில் நிறுவனம், பசுமைமிக்க ஆற்றலுக்கு மாறுவதற்கான திட்டங்களை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே மரபுசாரா எரிபொருட்கள், உயிரி எரிபொருட்கள், பசுமை ஹைட்ரஜன், கார்பன் நிலைப்படுத்த புதிய சூழலை உருவாக்குதல், கார்பன் கவர்ந்து பயன்படுத்துதல் மற்றும் கார்பன் சேமித்தல் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோலியத்துடன் இதுவரை 10 சதவீதம் எத்தனால் கலந்து விற்பனை செய்து வருகிறது. இதைவரும் 2025-க்குள் 20 சதவீதமாக ஆக உயர்த்த வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எத்தனால் கலப்பு திட்டத்தால் மதிப்புமிக்க அந்நியச்செலாவணி மிச்சப்படுவதுடன் நிலையான சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மாற்று புதிய எரிபொருளாக உயர் செயல்திறன் மிக்க டீசலை, “எக்ஸ்ட்ரா க்ரீ்ன” என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் இது துாய்மையான எரிபொருளாகவும், அதிக சிக்கனத்தை தருவதோடு, சப்தத்தையும் குறைக்கிறது. மேலும், ‘எக்ஸ்பி 100’ என்ற 100 ஆக்டேன் தரம் கொண்ட எரிபொருள் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம். உயர்தர சொகுசு கார், பைக் போன்றவை சிறப்பாக செயல்படும் வகையில் இந்த எரிபொருள் உதவுகிறது.

உயர்தர ஆக்டேன் பெட்ரோலை பயன்படுத்தி ஆட்டோமேக்ஸ் வாயிலாக ‘எக்ஸ்பி 100’ தயாரிக்கப்படுகிறது. எக்ஸ்பி 100 சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் ஊட்டியில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இது புதுச்சேரி, மதுரை மற்றும் கிருஷ்ணகிரியில் அறிமுகம் செய்யப்படும்.

மத்திய அரசு வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இயற்கை எரிவாயு பயன்பாட்டினை தற்போதுள்ள 6.2 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 105 மாவட்டங்களில் பைப்லைன் வழியாக இயற்கை எரிவாயு விநியாகத்திட்டத்திற்கான உரிமையை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 105 இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையங்களை இயக்கி வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE