வணிகம்

மத்திய பட்ஜெட் தயாரிப்பு குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளன. அதன் முதல்கட்டமாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் துறை அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக அவர், மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதி அமைச்சர்களை டெல்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநில நிதியமைச்சர்கள் பட்ஜெட் தயாரிப்புக்கான தங்களது ஆலோசனைகளையும், கருத்துகளையும் நிர்மலா சீதாராமனிடம் விளக்கிக் கூறினர். மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, பகவத் கரத், தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், மாநில நிதித் துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த செயலர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற மக்களவைக்கு வரும் 2024-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றதற்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் முழு நிதி ஆண்டுக்கான கடைசி முழு நீள பட்ஜெட்டாக 2023-24-க்கான பட்ஜெட் அமைய உள்ளது.

எனவே, இந்த பட்ஜெட் பொது மக்கள் மற்றும் பல்வேறு தொழில் துறையினருக்கு ஆதரவான பட்ஜெட்டாக இருக்கும் என்பது பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டுக்கு முந்தையஆலோசனைகளை பல்வேறு தொழில் துறை நிபுணர்களுடன் தீவிரமாக மேற்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT