புதுடெல்லி: இந்தியாவில் ஜப்பான் நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிக்கும் வகையில் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியுடன் (ஜேபிஐசி) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்துக்கும் (என்ஐஐஎஃப்) சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கிக்கும் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. நிதி கட்டமைப்பு இந்த ஒப்பந்தத்தின்படி, இவ்விரு அமைப்புகளும் இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்யும் திட்டங்களில் முதலீடு செய்யும். இதற்கென்று இந்தியா - ஜப்பான் நிதி கட்டமைப்பு உருவாக்கப்படும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியா மற்றும் ஜப்பான் நிறுவனங்கள் இணைந்து புதிய முதலீடுகளை இந்தியாவில் மேற்கொள்ள வழி செய்யும். அந்தவகையில் இவ்விரு நாடுகளிடையிலான தொழில் உறவை வலுப்படுத்துவதாக இந்த ஒப்பந்தம் அமையும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்கட்டமைப்பு சார்ந்த முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், 2015-ம் ஆண்டு மத்திய அரசு தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.