பெங்களூரு: பண்டிகை நாட்களில் பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம். அதுவும் பெங்களூரு மாதிரியான தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் நிறைந்த நகரத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், பெங்களூரு நகரில் இருந்து ஹூப்ளிக்கு பேருந்தில் செல்வதற்கான கட்டணம் ரூ.5,000 என சொல்லி ட்விட்டர் தளத்தில் ஒரு போஸ்ட் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது விமான கட்டணத்தை விட அதிகம் என அதில் சொல்லப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் இருந்து சுமார் 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் பல்வேறு நகரங்களுக்கு இந்த பேருந்துகள் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் ‘ஹூப்ளி-தார்வாட் இன்ஃப்ரா’ என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த ஐயாயிரம் ரூபாய் பேருந்து கட்டணம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக ஸ்கிரீன்ஷாட்டையும் அதில் பதிவர்கள் இணைத்துள்ளனர்.
“பெங்களூரு - ஹூப்ளி பேருந்து கட்டணம் விமான கட்டணத்திற்கே கடுமையான போட்டியை கொடுத்துள்ளது” என அதில் கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு ரயில்வே மற்றும் கர்நாடக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவும் இந்த பதிவில் டேக் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேருந்து டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் தளங்களில் தேடி பார்த்தோம். பெங்களூரு நகரில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஹூப்ளி. பேருந்து கட்டணம் சராசரியாக ரூ.2,000 முதல் இருக்கிறது. இந்த இரண்டு ஊர்களுக்குமான விமான கட்டணம் சுமார் 6 முதல் 7 ஆயிரம் ரூபாயாக உள்ளதையும் அறிந்து கொள்ள முடிகிறது.