புதுடெல்லி: ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான பணப்பரிவர்த்தனையை ரூபாயிலேயே மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வர்த்தகக் கொள்கையில் திருத்தம் செய்துள்ளது. இதனால், இனி இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் வெளிநாடுகளுடனான பணப் பரிவர்த்தனையை ரூபாயிலேயே மேற்கொள்ள முடியும்.
தற்போது இந்தியா அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை பெரும்பான்மையாக டாலரில் மேற்கொண்டு வருகிறது. இதனால், இறக்குமதி அதிகமாகும் சமயத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைகிறது.
மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைகிறது. இது தவிர, அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகத்தில் ஈடுபடுவதும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது.
இந்தச் சூழலை மாற்றி அமைக்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியது. இந்திய வங்கிகள் வோஸ்ட்ரோ கணக்குகள் திறப்பதன் மூலம் வெளிநாடுகளுடன் ரூபாயிலேயே வர்த்தகம் செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதத்தில் ரிசர்வ் வங்கி அறிவிப்பும் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, வங்கிகள் வோஸ்ட்ரோ கணக்குளை திறப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் கேட்டுக்கொண்டது. இந்நிலையில்,தற்போது வர்த்தக கொள்கையிலேயே இதுதொடர்பாக மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வோஸ்ட்ரோ கணக்கு மூலம் இந்திய இறக்குமதியாளர்கள், அவர்கள் செலுத்த வேண்டிய தொகையை டாலருக்குப் பதிலாக ரூபாயிலேயே செலுத்த முடியும். அதேபோல் ஏற்றுமதியாளர்கள் அவர்களுக்குரிய தொகையை எதிர்நாட்டிலிருந்து ரூபாயிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.
வோஸ்ட்ரோ கணக்குகள் எப்படி செயல்படும்?
இந்தியா-ரஷ்யாவுடனான வர்த்தகத்தை ரூபாயில் மேற்கொள்ள விரும்பினால், இந்திய வங்கிகள் ரஷ்யாவில் உள்ள வங்கிகளில் சிறப்புக் கணக்கைத் திறக்க வேண்டும். அந்தக் கணக்கில் ரஷ்ய நாணயமான ரூபிளில் ஒரு குறிப்பிட்டத் தொகையை வைப்புத் தொகையாக இந்திய வங்கிகள் செலுத்த வேண்டும்.
அதேபோல் ரஷ்ய வங்கிகள் இந்திய வங்கிகளில் சிறப்புக் கணக்கைத் திறந்து ரூபாயில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்பாகக் கொள்ளும். இந்தச் சிறப்புக் கணக்குகள் ‘வோஸ்ட்ரோ கணக்குகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
இந்திய இறக்குமதியாளர் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும்போது அதற்கான தொகையை அவர் தன்னுடைய இந்திய வங்கியில் ரூபாயில் செலுத்துவார். இந்தத் தகவல் சம்பந்தப்பட்ட ரஷ்ய வங்கிக்குச் செல்லும். அதையடுத்து, அந்த ரஷ்ய வங்கியில் இந்திய வங்கி வரவு வைத்துள்ள ரூபிள் கணக்கிலிருந்து ரஷ்ய ஏற்றுமதியாளருக்கான தொகை வழங்கப்பட்டுவிடும்.
அதேபோல் இந்திய ஏற்றுமதியாளர் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யும்போது ரஷ்யாவில் உள்ள இறக்குமதியாளர் அதற்கான தொகையை ரஷ்ய வங்கியில் செலுத்திவிடுவார். அதையடுத்து இந்திய வங்கியில் ரஷ்ய வங்கிக் கொண்டிருக்கும் ரூபாய் வைப்பிலிருந்து அந்த ஏற்றுமதிக்கான தொகை உரியவருக்குக் கொடுக்கப்பட்டுவிடும்.