நடப்பாண்டில் 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சி - பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பாண்டில் இந்தியா 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக அவர் பேசியதாவது:

இந்தியாவின் பொருளாதாரம் 2025-ம் ஆண்டில் 1 லட்சம் கோடி டாலரை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப இந்தியாவின் பொருளாதார கட்டமைப்புகள் வலுவாக உள்ளன. இந்தியாவின் தேசிய கட்டமைப்பு திட்டங்களில் 1.5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.

மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவின் வளர்ச்சி நடப்பாண்டில் 7.5 சதவீதத்தை எட்டும். புதிய இந்தியாவில் அதற்குரிய சீர்திருத்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறைக்கும் பிரத்யேக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால் தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்ததாக இது இருக்கும். ஒவ்வொரு துறையிலும் புத்தாக்க சிந்தனைகளுக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளித்து ஊக்குவிக்கிறது என்று குறிப்பிட்டார்.

ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பின் மாநாடு துவங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக வர்த்தக பிரிவின் கூட்டம் தொடங்கியது.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலக நாடுகளின் மக்கள் தொகையில் இந்த ஐந்து நாடுகளில் 41 சதவீதம் பேர் உள்ளனர். உலகளாவிய வளர்ச்சியில் இவற்றின் பங்கு 24 சதவீதமாகவும், வர்த்தகத்தில் 16 சதவீதமாகவும் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE