பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 99 சதவீதம் திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாத முடிவிலேயே 99 சதவீத பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகள் திரும்ப வந்துவிட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த நிதியாண்டில் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான தொகை இருமடங்காகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
``நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15,44,000 கோடியாக இருக்கும்’’ என மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் தெரிவித்தார். தற்போது 15,28,000 கோடி ரூபாய் திரும்ப வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் திரும்பவரவில்லை. இதுஒரு வகையில் ரிசர்வ் வங்கிக்கு லாபம். ஆனால் இந்த மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு செலவிட்ட தொகை ரூ.21,000 கோடி. இதை பரிந்துரை செய்து அமல்படுத்திய பொருளாதார நிபுணர்கள் நோபல் பரிசை வெல்வார்கள். 99 சதவீத நோட்டுகள் திரும்ப வந்துள்ளன. அதாவது பணமதிப்பு நீக்கம் மூலம் எளிதாக கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றியுள்ளார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.