9306 புள்ளிகளை கடந்தது நிப்டி; மிட்கேப் பங்குகள் விலை உயர்வு

இந்தியப் பங்குச் சந்தைகளில் நேற்று ஏற்றமான வர்த்தகம் நிலவியது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு முதல் முறையாக 9300 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் முடிந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 287 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட இந்திய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் சாதகமாக அமைந்துள்ளதும், பிரான்ஸ் நாட்டின் தேர்தல் முடிவுகளையொட்டி சர்வதேச சந்தைகளில் சாதகமான போக்கு இருப்பதாலும் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவியது என்று சந்தை நோக்கர்கள் குறிப்பிட்டனர்.

நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் 1 சதவீதம் வரை உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 29943 புள்ளிகளிலும், நிப்டி 9306 புள்ளிகளிலும் வர்த்தகம் முடிந்துள்ளது. வங்கி மற்றும் நிதிச் சேவை, எப்எம்சிஜி துறை பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.

நிப்டி மிட்கேப் பங்குகள் 0.8 சதவீத ஏற்றம் கண்டன. மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் 1461 பங்குகள் விலை உயர்ந்தன. 1452 பங்குகள் விலை சரிந்தன. பிஎஸ்இ சென்செக்ஸ் பங்குகளில் பார்தி இன்பிராடெல் 4.75 சதவீத ஏற்றம் கண்டது. ஆக்ஸிஸ் வங்கி, பிபிசிஎல், எம் அண்ட் எம், ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகள் விலை உயர்ந்தன. டாடா பவர், சிப்லா, அரபிந்தோ பார்மா, டிசிஎஸ் பங்குகள் சரிவைக் கண்டன.

சந்தையின் இந்த ஏற்றமான போக்கு அடுத்த 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று எடெல்வைஸ் செக்யூரிட்டீஸின் தலைவர் விகாம் ஹெமானி குறிப்பிட்டுள்ளார். சந்தை ஒவ்வொரு ஆண்டும் 15 முதல் 18 சதவீதம் வரை ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE