வணிகம்

குறைகிறது வீடுகளின் விலை

செய்திப்பிரிவு

பொருளாதார தேக்க நிலை காரணமாக ரியல் எஸ்டேட் தொழில் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதிகரித்துவரும் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகளின் விலைகளை குறைத்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன.

இவ்விதம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கடன் சுமையைக் குறைத்துக் கொள்ள பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் ரூ. 36 லட்சத்துக்கு அறிவிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் விலை இப்போது ரூ. 25 லட்சத்துக்கு குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. விலைகளும் குறைந்துள்ளதால் வீடுகளை வாங்குவதற்கு சிலர் முன்வருகின்றனர்.

தேக்க நிலை காரணமாக புதிதாக வீடுகளை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மேலும் முதலீடாகக் கருதி வீடுகளை வாங்குவோர் எண்ணிக்கை முற்றிலுமாகக் குறைந்துவிட்டது. இதனால் குறைந்த அளவு லாபம் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு ரியல் எஸ்டேட் துறையினர் வந்துவிட்டனர். பெரு நகரங்களில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு சலுகைகள், இலவசங்களையும் ரியல் எஸ்டேட் துறையினர் அறிவிக்கின்றனர்.

தங்கள் நிறுவனத்தில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளை வாங்குவோருக்கு ஏசி வசதி இலவசம், மாடுலர் கிச்சன், ஐ-பேட், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுப் பொருள்களை வழங்குகின்றனர். இன்னும் சில நிறுவனங்கள் வீடு வாங்குவோருக்கு காரையும் இலவசப் பரிசாக அறிவித்துள்ளன.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இலவச பரிசுகள் தவிர, பல்வேறு புதிய பரிசுகள், சலுகைகளை அறிவிக்க முடிவு செய்துள்ளன.

ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறுவது மற்றும் லாபமீட்டுவதில் மிகவும் சிரமப்படுகின்றன. இதற்காகவே வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளை அளித்து ஈர்க்க முயன்று வருகின்றன. அனைத்துத்துறை யிலும் ஆள் குறைப்பு, ஊதிய உயர்வு இல்லாதது உள்ளிட்ட சிரமமான சூழல் இருப்பதால் வீடுகளில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மந்தமான பொருளாதார சூழல் நிச்சயம் மாறும். இது சுழற்சி அடிப்படையிலானது. இந்நிலையும் மாறும். எனவே இப்போது வீடு வாங்குவது மிகவும் சமயோசிதமான முடிவாக இருக்கும் என்று ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சம்மேளனம் (கிரடாய்) தலைவர் லலித் குமார் ஜெயின் தெரிவிக்கிறார். ஆனால் பொருளாதார மீட்சிக்கான சமிக்ஞைகள் தோன்றாதவரை, மக்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயம்.

இருப்பினும் வீடுகளை வாங்குவோர் எச்சரிக்கையாக பல்வேறு அம்சங்களையும் கவனித்து வாங்குமாறு சிபிஆர்இ பத்திரிகை அறிவுறுத்தியுள்ளது. முதலீட்டு அடிப்படையில் வீடுகளில் முதலீடு செய்வோர் அதற்குரிய பலனை 3 ஆண்டுகள் கழித்தே எதிர்பார்க்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல அடுக்கு மாடிக் குடியிருப்புகளைத் தேர்வு செய்வோர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பின்னணியை நன்கு தெரிந்துகொண்டு முதலீடு செய்வது சிறந்தது.

SCROLL FOR NEXT