4,360 எம்எஸ்எம்இ நிறுவனங்களின் தயாரிப்புகளை மின் வணிகம் மூலம் விற்க வசதி ஏற்படுத்திய தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 4,360 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை மின்வணிகம் மூலம் விற்பனை செய்வதற்கு தமிழக அரசின் ‘ஃபேம் டிஎன்’ நிறுவனம் மூலம் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக எம்எஸ்எம்இ துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ மேம்பாட்டு ஒருங்கிணைப்பு அலுவலகம், வெளிநாடு வர்த்தக இயக்குநர் ஜெனரல் அலுவலகத்துடன் இணைந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற மின்வணிக (இ-காமர்ஸ்) நிறுவனங்கள் மூலம் எவ்வாறு ஏற்றுமதி மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஒருநாள் தேசிய கருத்தரங்கை சென்னையில் நேற்று நடத்தியது.

இதில், தமிழக அரசின் எம்எஸ்எம்இ துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: இன்றைக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ள பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, மின்வணிகம் அபரிமிதமான வளர்ச்சியைஅடைந்து வருகிறது. மின்வணிகம் மூலம் சர்வதேச அளவில் மக்களின் வீடுகளுக்கே நேரடியாக பொருட்கள் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

அண்மைக் காலமாக, மின்வணிகம் மூலமான ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவின் மின்வணிக ஏற்றுமதி நடப்பாண்டில் 99 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்தியாவின் மின்னணு வர்த்தகம் 1.29 சதவீதமாக உள்ளது. சீனாவின் வர்த்தகம் 53.64 சதவீதமாக உள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தையில் மின்னணு வர்த்தகத்துக்கு ஏராளமான சந்தை வாய்ப்புகள் உள்ளன. இதற்கு ஓஎன்டிசி போன்ற தளங்கள் உதவுகின்றன.

தமிழக அரசின் ‘ஃபேம் டிஎன்’ நிறுவனம் இதுவரை, தமிழகத்தில் உள்ள 4,360 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை ஃபிளிப்கார்ட் நிறுவனம் மூலம் விற்பனை செய்வதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன்மூலம், ரூ.11.5 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

பயிலங்கில் பேசிய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் அலுவலகத்தின் மண்டல கூடுதல் இயக்குநர் ராஜலஷ்மி தேவராஜ், `‘மின்னணு வர்த்தகம் மூலம் ஏற்றுமதி செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைக் காலங்கள் மற்றும் பருவ காலங்களுக்கு ஏற்ற வகையிலான பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். அதேபோல், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தரத்துடன் இருப்பது மட்டுமின்றி அவற்றை சிறந்த முறையில் பேக்கேஜிங் செய்ய வேண்டும். வரும் 2030-ம் ஆண்டுக்குள் மின்னணு வர்த்தகம் மூலம் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இப்பயிலரங்கில், எம்எஸ்எம்இ மேம்பாட்டு ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் இணை இயக்குநர் சுரேஷ் பாபுஜி, உதவி இயக்குநர் சி.பி.ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE