மும்பை: பங்குச் சந்தை இன்ப்ளூயன்ஸரான முகம்மது நஷ்ருதீன் அன்சாரி கடந்த 2021 ஜனவரி முதல் 2023 ஜூலை வரையிலான 2.5 ஆண்டு காலகட்டத்தில் பங்குச் சந்தையில் ரூ.3 கோடி இழந்துள்ளார் என்று செபி தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டுவதற்கான வழிமுறையைக் கற்றுத் தருவதாகக் கூறி மக்களிடமிருந்து ரூ.17 கோடி வசூல் செய்துள்ளார் என்றும் இந்தப் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்த நிலையில் அவருக்கு ரூ.3 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் செபி குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், விதிகளை மீறி செயல்பட்டு வந்ததாகக் கூறி, பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு முகம்மது நஷ்ரூதின் அன்சாரிக்கு செபி தடைவிதித்துள்ளது. மேலும், மக்களிடமிருந்து பெற்ற ரூ.17.2 கோடியை ஒப்படைக்கும்படி கடந்த வாரம் செபி உத்தரவிட்டுள்ளது.
முகம்மது நஷ்ரூதின் அன்சாரி பங்குச் சந்தை முதலீடு தொடர்பான இன்ப்ளூயன்சர் ஆவார். இவரது ‘பாப் ஆப் சார்ட்’ நிறுவனம் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய கற்றுக்கொள்பவர்களின் மத்தியில் மிகவும் பிரபலம். இவர் தனது யூடியூப் சேனல் வழியாக பங்குச் சந்தை குறித்த ஆலோசனைகளை வழங்கி வந்தார். எந்தப் பங்கில் எப்போது முதலீடு செய்ய வேண்டும், எப்போது அதை விற்க வேண்டும் என்பது உட்பட பங்குச்சந்தை முதலீடு தொடர்பாக பதிவிட்டுவந்தார்.
பங்குச் சந்தை முதலீட்டு நிபுணர் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர், பங்குச்சந்தை தொடர்பான கட்டண வகுப்புகளையும் நடத்த ஆரம்பித்தார்.
விளம்பரம்: தன்னுடைய வகுப்பில் இணைபவர்கள் பங்குச் சந்தை மூலம் மாதம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும் என்று விளம்பரப்படுத்தினார். இதனால், இவரது வகுப்புக்கு பலர் கட்டணம் செலுத்தி பதிவு செய்தனர். மொத்தமாக இதன் மூலம் ரூ.17.2 கோடி இவர் வசூல் செய்துள்ளார். இந்தச் சூழலில், இவரது செயல்பாடு விதிக்கு புறம்பானது என்று செபிக்கு புகார்கள் வந்தன. இவர் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற ரூ.17.2 கோடியை அவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார் என்பதும் அதில் கடந்த 2.5 ஆண்டுகளில் ரூ.3 கோடி இழந்துள்ளார் என்பதும் செபியின் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் அவர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு செபி தடைவிதித்துள்ளது. மேலும், மக்களிடமிருந்து பெற்ற ரூ.17.2 கோடியை திருப்பி வழங்கும்படி செபி உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பங்குச் சந்தை தொடர்பாக முதலீட்டு ஆலோசனை வழங்குபவர்களின் தவறான வழிகாட்டுதல்களால் மக்கள் பணத்தை இழந்து நிற்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில்,இத்தகைய இன்ப்ளூயன்ஸர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் செபி இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.