கோவை: பருத்தியை முக்கிய மூலப்பொருளாக கொண்டு செயல்படும் தமிழக ஜவுளித்தொழிலில் ஆண்டுதோறும் 115 லட்சம் பேல்கள் (ஒரு பேல் 170 கிலோ) பஞ்சு தேவைப்படும் நிலையில் 9 லட்சம் பேல்கள் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அரசு நடவடிக்கை எடுத்தால் 5 ஆண்டுகளில் தன்னிறைவு அடையலாம் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்தொழில் விளங்குகிறது. தமிழகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மொத்தம் 2,300 நூற்பாலைகள் (ஓபன் எண்ட் நூற்பாலைகள் உட்பட) செயல்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற போதும், குறைவான பருத்தி விளைச்சல் இத்துறை வளர்ச்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளதாக தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது: தமிழக ஜவுளித்தொழில் 100 ஆண்டுகள் கடந்த பாரம்பரியத்தை கொண்டுள்ளது. 2,300 நூற்பாலைகள், 1.90 லட்சம் ஸ்பிண்டில்கள் மற்றும் 5.6 லட்சம் ரோட்டார்கள் (நூல் உற்பத்தி செய்ய உதவும் இயந்திரங்கள்) உள்ளன. மாதந்தோறும் தமிழக அரசுக்கு ரூ.2,300 கோடி வருவாய் ஈட்ட உதவி வருகிறது. ஆண்டுக்கு 115 லட்சம் பேல்கள் பஞ்சு தேவைப்படும் நிலையில், தமிழகத்தில் 9 லட்சம் பேல் பஞ்சு மட்டுமே விளைச்சல் உள்ளது.
அரியலூர், பெரம்பலூர், கும்பகோணம், மயிலாடுதுறை, ராஜபாளையம், ஜெயங்கொண்டம், விழுப்புரம், விருத்தாசலம், ராசிபுரம் உள்ளிட்ட 13 இடங்களில் தற்போது பருத்தி சாகுபடி நடக்கிறது. கடந்த 1970 முதல் 1984-ம் ஆண்டு வரை கோவை, திருப்பூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகள் பருத்தி விளைச்சலில் அதிக பங்களிப்பு கொண்டிருந்தன. இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 350 லட்சம் பேல் பஞ்சு விளைச்சல் உள்ளது என மத்திய அரசு கூறி வரும் நிலையில், கள நிலவரப்படி 280 முதல் 285 லட்சம் பேல்கள் வரை மட்டுமே பஞ்சு விளைச்சல் உள்ளது.
ஆண்டுதோறும் 60 லட்சம் பேல் பஞ்சு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, துருக்கி, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி விதிக்கப்படுவது, தமிழகத்தில் மின்கட்டண உயர்வு ஆகிய காரணங்களால் வரலாறு காணாத நெருக்கடியை தமிழக ஜவுளித்தொழில்துறை எதிர்கொண்டுள்ளது.
அடிப்படைத் தேவையான பருத்தி விளைச்சலை அதிகரிக்க தற்போது பருத்தி சாகுபடி செய்யும் பகுதிகளில் மாவட்டம் வாரியாக 2,000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து மானியத்துடன் கூடிய சிறப்பு திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தி விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்ட அரசு உதவ வேண்டும்.
விவசாயிகளை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உடனடியாக பருத்தி விளைச்சல் 9 லட்சத்திலிருந்து 20 லட்சம் பேல்களாக அதிகரிக்கும். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தால் 5 ஆண்டுகளில் பஞ்சு தேவையில் தமிழகம் தன்னிறைவடையும். பருத்தி விளைச்சலை அதிகரிக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஜவுளித்தொழில் அமைப்புகள் சார்பில் தேவையான உதவி மற்றும் ஆலோசனை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.