வணிகம்

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் எதிரொலி: தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 அதிகரிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் எதிரொலியாக, தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.42,960-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை கடந்த ஜுன் மாதம் 4-ம் தேதி பவுனுக்கு ரூ.46 ஆயிரம் என உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர், தங்கம் விலை படிப்படியாக குறைந்தது. இம்மாதம் 6-ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.42,280-க்கு விற்பனையானது. தங்கம் விலை குறையத் தொடங்கியதைக் கண்டு நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்களது மகிழ்ச்சி ஓரிரு நாட்கள் கூட நீடிக்கவில்லை.

காரணம், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.85 அதிகரித்து ரூ.5,370-க்கும், பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.42,960-க்கும் விற்பனையானது.

இதுகுறித்து, நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இந்நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, தங்கத்தின் விலை திடீரென ஏறத் தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் போரின் போக்கை வைத்துதான் தங்கம் விலை உயர்வைக் கணிக்க முடியும்’’ என்றனர்.

இதற்கிடையே, வரும் நாட்கள் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் என்பதால் நகை வாங்க பலரும் திட்டமிட்டிருந்தனர். அதற்கேற்ற வகையில் தங்கம் விலை குறைந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தங்கம் விலை திடீரென உயர்ந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT