புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 1,504 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (ஜன. 26) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
"புதுச்சேரி மாநிலத்தில் 4,815 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 1,060 பேர், காரைக்காலில் 264 பேர், ஏனாமில் 149 பேர், மாஹேயில் 31 பேர் என மொத்தம் 1,504 (31.24 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 56 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகளிலும் 233 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 16,065 பேரும் என மொத்தமாக 16,298 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், புதுச்சேரி நைனார்மண்டபம் வள்ளலார் நகரைச் சேர்ந்த 76 வயது முதியவர், நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த 46 வயது ஆண், ஏனாமைச் சேர்ந்த 51 வயது பெண் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் புதுச்சேரியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,915 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.22 சதவீதமாக உள்ளது.
புதிதாக 1,597 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 545 (88.38 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என 15 லட்சத்து 27 ஆயிரத்து 24 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது."
இவ்வாறு சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.