கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

குடியரசு தினத்தில் இரு மாநிலங்களில் தேசியக் கொடியேற்றுகிறார் ஆளுநர் தமிழிசை

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி : குடியரசு தினத்தையொட்டி, புதுச்சேரி மற்றும் தெலுங்கானா என இரு மாநிலங்களிலும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக் கொடி ஏற்றவுள்ளார்.

நாடு முழுவதும் சுதந்திர தின விழாவில் முதல்வரும், குடியரசு தின விழாவில் ஆளுநர்களும் அந்தந்த மாநிலங்களில் தேசியக் கொடியேற்றுவது வழக்கம். தெலுங்கானாவிற்கு ஆளுநராக இருந்து வரும் தமிழிசை, புதுச்சேரி மாநிலத்திற்கும் துணை நிலை ஆளுநராக கூடுதலாக கவனித்து வருகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த வீரேந்திர சிங் கட்டாரியா ஜூலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதையடுத்து புதுவை துணை நிலை ஆளுநர் பொறுப்பை அந்தமான் ஆளுநர் ஏ.கே.சிங் கூடுதலாக கவனித்தார். அப்போது 2015-ம் ஆண்டு குடியரசு தினவிழாவின்போது ஏ.கே.சிங் அந்தமானில் தேசியக்கொடி ஏற்றினார்.

புதுவையில் நடந்த குடியரசு தினவிழாவில் முதல்வராக இருந்த ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார். அதேபோல் இம்முறை தெலுங்கானாவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் தமிழிசை பங்கேற்பார் என்பதால், புதுவையில் முதல்வர் ரங்கசாமி கொடியேற்ற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

இது பற்றி அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "வரும் 26-ம் தேதி புதுவை மற்றும் தெலுங்கானா குடியரசு தின விழாக்களில் ஆளுநர் தமிழிசையே பங்கேற்பார் என தெரியவந்துள்ளது. புதுச்சேரியில் அவர் விழாவை முடித்துவிட்டு, தெலுங்கானாவில் நடைபெறும் விழாவிலும் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் காலை 7 மணிக்கே குடியரசு தினவிழா நடக்கிறது. 8 மணிக்குள் நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு ஆளுநர் தமிழிசை தெலுங்கானா புறப்பட்டு செல்கிறார்" என்று தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT