கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

மீனவ சமூக இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி: சென்னை ஆட்சியர் அழைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணிகளில் சேர்வதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்தப் பயிற்சி நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க சென்னை அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்துடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவப் பட்டதாரி இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆயத்தப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவக் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி (Guidelines) விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், எண்.57, சூரியநாராயண செட்டி தெரு, ராயபுரம், சென்னை- 57. தொலைபேசி எண்: 044-2999 7697 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி அறிவுறுத்தியுள்ளார்'' என்று ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT