ஒரு நிமிட வாசிப்பு

தீபாவளியை முன்னிட்டு கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கைகள்: சிங்கப்பூர்

செய்திப்பிரிவு

தீபாவளிப் பண்டிகை வருவதைத் தொடர்ந்து லிட்டில் இந்தியா உள்ளிட்ட சிங்கப்பூரின் முக்கிய வீதிகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து சிங்கப்பூர் சுற்றுலாத்துறை தரப்பில், “தீபாவளிப் பண்டிகை வருவதைத் தொடர்ந்து லிட்டில் இந்தியா உட்பட சிங்கப்பூரின் முக்கிய வீதிகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க இந்த வருடமும் இரவு நேரங்களில் கடைகள் மூடியிருக்கும். எனினும் இந்த வருடம் கடைகளைக் கூடுதல் நேரம் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையற்ற நெரிசல்களைத் தவிர்க்கலாம். கூட்டத்தைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 3,058 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்னர். 9 பேர் பலியாகி உள்ளனர். சிங்கப்பூரில் செப்டம்பர் மாதத்திலிருந்துதான் கரோனா கட்டுக்குள் வந்திருக்கிறது. இதன் காரணமாக கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

''நாம் கரோனா தொற்றின் நடுவில் இருக்கிறோம். முழுமையாக கரோனாவிலிருந்து வெளியே வரவில்லை. இன்னும் பல நகரங்களில் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. பலர் உயிரிழந்து வருகின்றனர். ஆனால், மக்கள் கரோனா முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்'' என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசியைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளே முதன்மையானதாகப் பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன.

உலகம் முழுவதும் 23 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 47 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT