உலகளவில் பரவலாக பல்வேறு இடங்களிலும் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ஒரே நேரத்தில் முடங்கின.
இந்திய நேரப்படி சுமார் இரவு 9.30 மணியிலிருந்தே பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இயங்கவில்லை.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இணையவாசிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேவேளையில் ட்விட்டர் தளம் இயங்குகிறது. வாட்ஸ் அப் தனது பக்கம் முடங்கியது குறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது.
"வாட்ஸ் அப் பயன்பாட்டில் சிலருக்கு பிரச்சினை இருப்பதை அறிவோம். நாங்கள் எல்லாவற்றையும் சரி செய்ய முயன்று கொண்டிருக்கிறோம். விரைவில் அப்டேட் செய்கிறோம்" என்று ட்விட்டரில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விளாசிய நபர்:
முன்னதாக நேற்று அமெரிக்காவின் சிபிஎஸ் செய்தி சேனலின் 60 நிமிடங்கள் ("60 Minutes") என்ற நிகழ்ச்சியில் பேசிய டேட்டா சைன்டிஸ்ட் ஒருவர் பேஸ்புக் நிறுவனத்துக்கு அதன் வலைபக்கத்தால் குழந்தைகளின் மனநலன் பாதிக்கப்படுகிறது என்பதும் பேஸ்புக் வாயிலாக வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் நன்றாகவே தெரியும்.
ஆனாலும், அது தன்னை விஸ்தரித்துக் கொண்டே இருக்கிறது. நான் என் வாழ்நாளிலேயே பேஸ்புக் போன்ற மோசமான நிறுவனம் ஒன்றை சந்தித்ததே இல்லை என்று கூறியிருந்தார்.
37 வயதான பிரான்சாஸ் ஹாகன் என்ற அந்த நபர் கூகுள், பிண்டெரஸ்ட் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார்.
அவர் வெளிப்படையாக அப்படியொரு பேட்டியளித்த 24 மணி நேரத்துக்குள் பேஸ்புக் இன்கின் அனைத்து சமூக வலைதளங்களும் ஒரே நேரத்தில் முடங்கியுள்ளன.
ஏற்கெனவே, கடுமையான எதிர்ப்புக்கு இடையே தான் இன்ஸ்டாகிராம் தனது இஸ்டாகிராம் ஃபார் கிட்ஸ் திட்டத்தைக் கைவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.